அமெரிக்காவில் வழமைக்குத் திரும்பும் விமான நிலைய சேவைகள்
அமெரிக்காவின் முக்கிய விமான நிலையங்களில் விதிக்கப்பட்டிருந்த அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளதாக விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த பல வாரங்களாக அமெரிக்க அரசின் நிதி முடக்கத்தின் காரணமாக, விமானக் கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்குவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாகப் பலர் பணிகளிலிருந்து விலகியிருந்தனர்.
இதன் காரணமாக சுமார் 40-ற்கும் மேற்பட்ட விமான நிலையங்களின் செயல்பாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தன.
இதனையடுத்து, விமான நிறுவனங்கள் தங்கள் விமானங்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொள்ளுமாறு விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு ஆணையம் அறிவுறுத்தியிருந்தது.
கடந்த ஏழாம் திகதி முதல் அமுலுக்கு வந்த இந்தக் கட்டுப்பாடு காரணமாக ஆயிரக்கணக்கான விமான சேவைகள் ரத்துச் செய்யப்பட்டன.
அமெரிக்காவின் நியூயோர்க், சிகாகோ, லொஸ் ஏஞ்சல்ஸ், அட்லாண்டா போன்ற முக்கிய விமான நிலையங்கள் கடுமையான நெருக்கடிக்கு முகங்கொடுத்தன.
விமான சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டமையினால் பல இலட்சம் விமானப் பயணிகள் பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்தனர்.
இவ்வாறான நிலையில் அரசின் நிதி முடக்கத்தைத் தளர்த்த செனட் சபை அனுமதி வழங்கியுள்ளது. இதன் காரணமாக ஊழியர்கள் மீண்டும் தமது பணிகளுக்குத் திரும்பி வருகின்றனர்.
இதன் காரணமாக விமான நிலையங்கள் வழமை நிலைக்குத் திரும்பி வருவதாக விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு ஆணையம் குறிப்பிட்டுள்ளது.





