‘கும்கி’ படத்திற்கு பச்சைக்கொடி காட்டியது சென்னை உயர்நீதிமன்றம்
இயக்குனர் பிரபு சாலமன் இயக்கியுள்ள உருவாகியுள்ள கும்கி 2 படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் போட்ட தடை உத்தரவு நீக்கப்பட்டுள்ளது.
பட தயாரிப்பாளர் கோரிக்கை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் இந்த தடை உத்தரவை நீக்கியுள்ளது..
இன்று வெளியாக இருந்த கும்கி 2 படத்தை வெளியிட தடை விதிக்க கோரி சினிமா ஃபைனான்சியர் சந்திரபிரகாஷ் ஜெயின் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், கும்கி-2 படத்தை தயாரிக்க கடந்த 2018 ஆம் ஆண்டு பிரபு சாலமன் தன்னிடம் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் கடன் பெற்றதாக கூறியுள்ளார்.
ஆகவே வட்டியுடன் சேர்த்து 2 கோடியே 50 லட்சம் ரூபாயை பிரபு சாலமன் திருப்பித் தராத நிலையில் கும்கி-2 படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டார். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் படத்தை வெளியிட இடைக்கால தடைவிதித்தது.
இந்நிலையில், கும்கி 2 படத்தை வெளியிட தடை விதித்த உத்தரவை நீக்கக் கோரி, பட தயாரிப்பு நிறுவனமான பென் இந்தியா நிறுவனத்தின் சார்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
மேலும், அந்த நிறுவனத்தின் சார்பில், “பிரபு சாலமன் படத்தின் இயக்குனர் மட்டுமே. அவர் வாங்கிய கடனுக்கு பென் இந்தியா பொறுப்பேற்க முடியாது. தணிக்கை சான்று, தங்கள் நிறுவனத்தின் பெயரில் உள்ளது.” என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நிதிமன்றம், ஒரு கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்த இயக்குனர் பிரபு சாலமனுக்கு உத்தரவிட்டு, ‘கும்கி 2’ படத்தை வெளியிட அனுமதி அளித்துள்ளது.






