இருட்டுச் சந்தையில் சிங்கப்பூர் கடன் அட்டைகள் – வெளியான அதிர்ச்சித் தகவல்!
சிங்கப்பூரில் கடன் அட்டை மோசடிகள் தீவிரம் அடைந்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூரில்தான் கடன் அட்டைகள் அதிக அளவில் திருடப்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
மின்னிலக்கப் பரிவர்த்தனைகளை அதிகம் சார்ந்துள்ள சிங்கப்பூரின் பொருளாதார நிலைக்கு இது பெரும் சவாலாக அமைந்துள்ளது. இந்தத் தகவலை, VPN சேவைகளை வழங்கும் நொர்ட்விபிஎன் (NordVPN) நிறுவனத்தின் ஆய்வாளர் குழுவான நொர்ட்ஸ்டெல்லார் (NordStellar) தெரிவித்துள்ளது.
இவ்வாறு திருடப்படும் கடன் அட்டைகள் கறுப்புச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லித்துவேனியாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ‘நொர்ட்ஸ்டெல்லார்’ ஆய்வுக் குழுவின் தகவல்படி, கறுப்புச் சந்தையில் விற்பனை செய்யப்படும் கடன் அட்டைகளில் 60 வீதமானவை (சதவீதமானவை) அமெரிக்காவைச் சேர்ந்தவை ஆகும்.
கறுப்புச் சந்தையில் 11 வீதமான சிங்கப்பூர் கடன் அட்டைகளும், 10 வீதமான ஸ்பெயின் அட்டைகளும் உள்ளதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் கட்டண அட்டைகள் ஒவ்வொன்றும் சராசரியாக 17.22 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
சிங்கப்பூர் போன்ற வளர்ந்த நாடுகளின் அட்டைகளை மோசடியாளர்கள் முதன்மை இலக்காகக் கொள்ளவில்லை என்றாலும், பயனாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்தச் சூழ்நிலையில், கடன் அட்டைப் பயன்பாடு தொடர்பில் மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.





