பிரபல நடிகர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன்
போதைப் பொருள் வைத்திருந்தது தொடர்பாக நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா இருவரும் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்துள்ளனர்.
போதைப் பொருள் விற்பனை செய்தது தொடர்பாக, கைதான அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி டி. பிரசாத் அளித்த தகவலின் பேரில் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார்.
ஸ்ரீ கிருஷ்ணா, கெவின் என்பவரிடம் இருந்து போதைப்பொருளை வாங்கி நண்பர்களுடன் உட்கொண்டார் என பொலிஸாருக்கு தெரிவித்திருந்தது.
இவர்களுடைய வங்கிப் பணப் பரிவர்த்தனை, கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள் அடிப்படையில் கெவினும் கைதானார். இவர்களுக்கு போதைப் பொருள் சப்ளை செய்த கானா நாட்டின் ஜான் என்பவரும் கைது செய்யப்பட்டார். அவர்களிடம் இருந்து 40 ஆயிரம் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட பணம் தொடர்பாக விசாரணை நடத்த ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா இருவருக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இருவரும் ஜாமினில் உள்ள நிலையில் ஸ்ரீகாந்த்தை வரும் 28 ஆம் தேதியும், கிருஷ்ணாவை வரும் 29 ஆம் தேதியும் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.





