தென்சீனக் கடல் பகுதியில் நெருக்கடி – சீனா, ஆஸ்திரேலியா இடையே தீவிரமடையும் சொற்போர்!

தென்சீனக் கடல் பகுதியில் நடந்த சம்பவம் தொடர்பாக ஆஸ்திரேலியா மற்றும் சீனாவுக்கிடையிலான வார்த்தைப் போர் தீவிரமடைந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து ஆஸ்திரேலியப் பாதுகாப்புப் படை அபத்தமான பிரச்சாரத்தை முன்னெடுப்பதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது.
தென்சீனக் கடல் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட ஆஸ்திரேலியக் கண்காணிப்பு விமானம், தமது நாட்டு வான்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்தது என சீனா கடும் சீற்றத்தை வெளிப்படுத்தியது.
அத்துடன், இது நாட்டின் இறைமையை மீறும் செயல் எனவும் கண்டித்தது.
ஆனால், சர்வதேச வான் பரப்பிலேயே தாம் கண்காணிப்பில் ஈடுபட்டதாகவும், சீன விமானங்களே அச்சுறுத்தும் விதத்தில் செயற்பட்டதாகவும் ஆஸ்திரேலியப் பாதுகாப்புப் படை தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், ஆஸ்திரேலியாவின் இந்தச் செயலை விஷமத்தனமான பிரச்சாரம் என சீனா விமர்சித்துள்ளது.
அத்துடன், அத்துமீறலை ஆஸ்திரேலியா நிறுத்த வேண்டும், இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவைச் சீர்குலைக்கும் விதத்தில் ஆஸ்திரேலியா செயற்படக் கூடாது எனச் சீனா பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.