எரிபொருள் கொள்வனவு தொடர்பில் ட்ரம்புடன் பேசினாரா மோடி?
ரஷ்யாவிலிருந்து எரிபொருள் வாங்குவதை நிறுத்த இந்தியா நடவடிக்கை எடுக்கும் என்று இந்திய பிரதமர் தனக்கு உறுதியளித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கும் இடையே நேற்று (15) தொலைபேசி உரையாடல் எதுவும் நடைபெறவில்லை என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடிக்கும் அதிபர் டிரம்புக்கும் இடையே நேற்று உரையாடல் அல்லது தொலைபேசி அழைப்பு நடந்ததா என்பது குறித்து இந்திய ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் (Randhir Jaiswal) இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், நிலையற்ற எரிசக்தி சூழ்நிலைகளில் அதன் நுகர்வோரின் எரிபொருள் தேவைகளைப் பாதுகாப்பதே இந்திய அரசாங்கத்தின் தொடர்ச்சியான முன்னுரிமை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன் எரிபொருள் இறக்குமதி கொள்கைகள் அந்தத் தேவையை மனதில் கொண்டு செயல்படுத்தப்படுகின்றன என்று இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.
நாட்டில் நிலையான விலைகளையும் பாதுகாப்பான எரிசக்தி விநியோகத்தையும் உறுதி செய்வதே தனது அரசாங்கத்தின் எரிசக்தி கொள்கை என்று கூறிய இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் (Randhir Jaiswal), தற்போதைய அமெரிக்க நிர்வாகம் இந்தியாவுடன் எரிசக்தி உறவுகளை மேலும் வளர்ப்பதில் ஆர்வமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இதற்கிடையில், டிரம்பின் அறிக்கைக்கு பதிலளித்த ரஷ்யா, ரஷ்யாவிலிருந்து எரிபொருள் வாங்குவது இந்திய பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமானது என்று கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





