பாகிஸ்தானில் கோர விபத்து – 15 பேர் பலி, 8 பேர் காயம்
பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா (Khyber Pakhtunkhwa) மாகாணத்தில் நடந்த வீதி விபத்தில் குறைந்தது 15 பேர் உயிரிழந்ததுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்று (15) இரவு மலாகண்ட் (Malakand) மாவட்டத்தில் அதிவேக நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக மீட்பு அதிகாரிகள் இன்று(16) தெரிவித்தனர்.
லொரி ஒன்று கவிழ்ந்ததில் இந்த விபத்து நிகழ்ந்ததாக மாகாணத்தில் அவசர சேவைகள் துறையின் செய்தித் தொடர்பாளர் பிலால் பைசி தெரிவித்தார்.
விபத்துக்குள்ளான லொரியில் ஸ்வாட் (Swat) மாவட்டத்தை நோக்கி பயணித்த நாடோடி குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர் என்று அவர் கூறினார்.
தகவல் கிடைத்தவுடன் மீட்புக் குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நெடுஞ்சாலை காவல்துறையினர் மற்றும் பிற பணியாளர்களுடன் இணைந்து நடவடிக்கையை மேற்கொண்டதாக பைசி கூறினார்.
காயமடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதென அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.





