நவம்பர் மாதம் முதல் சீனா மீது 100 சதவீத வரி விதிப்பதாக அறிவித்துள்ள ட்ரம்ப்
தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமெரிக்கா – சீனா வர்த்தகப் போர் மீண்டும் தொடங்கியுள்ளது.
அரிய வகை கனிம வளங்களைச் சீனா ஏற்றுமதி செய்வதைக் கட்டுப்படுத்த சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 100 சதவீதம் வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று (10) அறிவித்துள்ளார்.
இந்த கூடுதல் வரி விதிப்பு நவம்பர் 1ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஏற்கனவே 30 சதவீத வரி உள்ள நிலையில் அடுத்த மாதம் 1ஆம் திகதி முதல் வரி 130 சதவீதமாக அதிகரிக்க உள்ளது.
வரும் 30ஆம் திகதி தென்கொரியாவில் நடைபெறும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு கூட்டத்தில் பங்கேற்க உள்ள ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் நேருக்கு நேர் சந்தித்துப் பேச இருந்தனர். ஆனால், சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி அறிவித்துள்ள ட்ரம்ப் இம்மாத இறுதியில் சீனா அதிபரை சந்திக்கப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, சீன பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்பட்ட நிலையில் அமெரிக்க பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.





