விஜய்க்கு ஆறுதல் கூறிய பழனிசாமி! ஜனவரியில் கூட்டணி குறித்து உடன்பாடு?
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, தவெக தலைவர் ஜோசப் விஜயுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதல் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கரூரில் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தால் விஜய் மனமுடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த அனர்த்தம் காரணமாக வீட்டை விட்டு வெளியில் வருவதையும், கட்சி நிர்வாகிகளை சந்திப்பதையும் விஜய் தொடர்ந்தும் தவிர்த்து வருகிறார்.
உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 20 லட்சம் ரூபாய் அறிவித்துள்ள நிலையில், அதையும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து வழங்க முடியாமல் தவித்து வருகிறார் என தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, விஜய்யை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்ததாகவும், கூட்டணிக்கு வருமாறு அழைத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் அதற்கு விஜய் மறுப்பும் தெரிவிக்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த உரையாடலின்போது, “நம் இருவருக்கும் பொது எதிரி திமுக. அதை 2026ஆம் ஆண்டு தேர்தலில் இணைந்து வீழ்த்துவோம் ” என்றும் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கூட்டணி தொடர்பான முடிவு மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக அடுத்த ஆண்டு ஜனவரியில் முடிவு செய்து கொள்ள இரு தரப்பும் முடிவு செய்துள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.





