ஆஸ்திரேலியாவில் பரவும் கொடிய பாக்டீரியா – மக்களுக்கு எச்சரிக்கை
ஆஸ்திரேலியாவின் பல மாநிலங்களில் மக்களிடையே ஒரு கொடிய பாக்டீரியா பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ட்ரெப்டோகாக்கஸ் டிஸ்கலாக்டியே கிளையினங்கள் ஈக்விசிமிலிஸ் (Streptococcus dysgalactiae subspecies equisimilis) என அழைக்கப்படும் இந்த பாக்டீரியா, தோல் வழியாக பரவி சிறிய காயங்களை ஏற்படுத்துவதுடன், பின்னர் கடுமையான நோய்களாக மாற்றுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சருமத்தைப் பாதிக்கும் இந்த பாக்டீரியா, இரத்தத்தின் மூலம் உடலின் முக்கிய உறுப்புகளுக்குள் பரவி, கடுமையான நிலையை ஏற்படுத்தும் என்றும் மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன் காரணமாக குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள், நீண்ட கால நோய்கள், மோசமான சுகாதார வசதிகள் உள்ள சமூகங்கள் மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள பழங்குடி மக்கள் இந்த பாக்டீரியாவிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
தோல் மற்றும் மென்மையான திசு தொற்றுகள் இந்த பாக்டீரியாவின் அறிகுறிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
மேலும் தோல் சிவத்தல், வலி மற்றும் காய்ச்சல் மற்றும் தோல்களில் காயங்கள் காணப்படுவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரத்த ஓட்டம் மூலம் பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டவர்களின் அறிகுறிகளில் குறைந்த இரத்த அழுத்தம், அசாதாரண இதயத் துடிப்பு மற்றும் அனைத்து உடல் செயல்பாடுகளிலும் கடுமையான குறைவு ஆகியவை அடங்கும்.
ஆஸ்திரேலியாவின் வடக்குப் பிரதேச டாப் எண்ட் பகுதி, நியூ சவுத் வேல்ஸ் மற்றும் கான்பெராவில் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் டிஸ்கலாக்டியே கிளையினங்கள் ஈக்விசிமிலிஸ் பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட பலர் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





