25 ஆண்டுகளுக்கு முன்பே கமலின் சாதனையை முறியடித்த தமிழ் நடிகை
71-வது தேசிய திரைப்பட விருது விழாவில் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதை த்ரிஷா தோசர் பெற்றார்.
த்ரிஷா தோசரை பொறுத்தவரை அவர் மராத்தியில் வெளியான ‘நாள் 2’ படத்துக்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதை பெற்றுள்ளார். இப்படத்தில் சிமி என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். தற்போது அவருக்கு 5 வயது. படத்தில் நடிக்கும்போது 3 வயது.

த்ரிஷா மராத்தி மொழி படங்களில் நடித்து வருகிறார். மிக குறைந்த வயதிலேயே தேசிய விருது பெற்றவர் என்ற பெருமையை த்ரிஷா தோசர் பெற்றிருக்கிறார்.
இந்த சூழலில் கமல்ஹாசன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பாராட்டு பதிவில், “உங்களுக்கு எனது பாராட்டுகள். நான் முதல் தேசிய விருது வாங்கும்போது எனக்கு வயது 6. என்னுடைய சாதனையை நீங்கள் முறியடித்துவிட்டீர்கள். இன்னும் கடக்க வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது மேடம். தொடர்ந்து பணியாற்றுங்கள். உங்கள் குடும்பத்தினருக்கு வாழ்த்துகள்” என தெரிவித்தார். இப்பதிவு வைரலானது.

இதற்கிடையே கமலின் இந்த சாதனையை த்ரிஷா தோசருக்கு முன்பாக 25 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு தமிழ் நடிகை முறியடித்தார் என்பது தெரியுமா? அதுவும் அந்த நடிகை 4வது வயதில் மிக இளம் வயதில் வருமான வரி செலுத்தியவர் என்கிற பெருமையையும் பெற்றார். அந்த தமிழ் நடிகை தெரியுமா?
அவர் தான் பேபி ஷாமிலி என அழைக்கப்பட்ட நடிகை ஷாமிலி. இவரை அறியாத தமிழ் ரசிகர்கள் இருக்கமாட்டார்கள். ‘அஞ்சலி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, இன்றும் மக்கள் மனதில் இருக்கும் ‘ஷாமிலி’ நடிகர் அஜித்தின் மனைவியின் ஷாலினியின் உடன்பிறந்த தங்கை என்பது குறிப்பிடத்தக்கது.

தனது அக்கா ஷாலினியை போலவே ஷாமிலியும் குழந்தை நடிகையாக தென்னிந்திய சினிமாவில் கலக்கினார். 1987ம் ஆண்டு பிறந்த ஷாமிலி விஜயகாந்த் நடிப்பில் வெளியான ‘ராஜநடை’ திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அடியெடுத்து வைத்தார். அப்போது அவருக்கு இரண்டு வயது தான்.
இதன் வெற்றி அடுத்த ஆண்டில் பட வாய்ப்புகளை அவருக்கு குவித்தது. இதனால் தனது 3வது வயதில் கன்னடம் மற்றும் தெலுங்கில் தலா இரண்டு படங்கள், தமிழ் மற்றும் மலையாளத்தில் தலா ஒரு படம் நடித்தார். இந்த படங்கள் அனைத்தும் ஹிட் ஆகின.

குறிப்பாக தமிழில் ‘அஞ்சலி’ படத்தில் நடித்ததற்காக ஷாமிலிக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. 1990ம் ஆண்டு இது நடந்தது. ஷாமிலியுடன் அதே அஞ்சலி திரைப்படத்தில் நடித்த தருண் மற்றும் ஸ்ருதி ஆகியோருக்கும் அந்த ஆண்டில் தேசிய விருது வழங்கப்பட்டது. எனினும், அவர்களில் குறைவான வயது கொண்டவர் ஷாமிலி மட்டுமே.
இந்தப் படத்துக்கு பின் பேபி ஷாமிலி என தென்னிந்திய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்தார். இதன்காரணமாக தனது 4 வயதில் மிக இளம் வயதில் வருமான வரி செலுத்தியவர் என்ற பெருமையும் ஷாமிலிக்கு கிடைத்தது.

அப்படியென்றால் ஷாமிலி அப்போது வழங்கப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஒரு படத்திற்கு ஷாமிலி ரூ. 2.5 லட்சம் வரை சம்பளம் கொடுக்கப்பட்டது. 2000ம் ஆண்டு வரை குழந்தை நட்சத்திரமாக நடித்த ஷாமிலி அதன்பின் 8 ஆண்டுகள் சினிமாவில் இருந்து ஒதுங்கி
விஷுவல் கம்யூனிகேஷன் பட்டமும் முதுகலைப் பட்டமும் பெற்ற ஷாமிலி ஹீரோயினாக 2009ம் ஆண்டு கம்பேக் கொடுத்து தெலுங்கில் சித்தார்த் ஜோடியாக நடித்தார்.

ஹீரோயினாக தொடர்ச்சியாக நடிக்காத ஷாமிலி 2016 வீர சிவாஜி என்கிற தமிழ் படத்திலும், ஒரு மலையாள படத்திலும் நடித்தார்.

இதன்பின் கிட்டத்தட்ட 9 ஆண்டுகளாக இதுவரை எந்தப் படத்திலும் ஷாமிலி நடிக்கவில்லை. நடிப்பை விட்டு ஒதுங்கிவிட்ட ஷாமிலி இப்போது கண்ணாடி ஓவிய கலைஞராக இருந்து வருகிறார். இதற்காக புளோரன்சில் உள்ள அகாடெமியா ரியாசியில் ஷாமிலி பயிற்சி எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.






