நிரந்தர வதிவிடத்தை நாடும் புலம்பெயர்ந்தோருக்கான விதிமுறைகளை கடுமையாக்கவுள்ள பிரிட்டன்
பிரிட்டனுக்குள் வேலைக்காக வரும் வெளிநாட்டவர்களுக்கு நிரந்தரவதிவிட உரிமை வழங்குவதைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது.நிரந்தர வதிவிடத்திற்கான விதிமுறைகளைக் கடுமையாக்கினால் குடியேறிகளின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிரந்தர வதிவிடத்திறக்கா விண்ணப்பம் செய்பவர்கள் பிரிட்டன் சமூகத்திற்கு எந்த வகையில் உதவுகிறார்கள் என்பதைப் பொறுத்துதான் அவர்களுக்கு நிரந்தர வதிவிட உரிமை கொடுக்கப்படும் என்று பிரிட்டனின் உள்துறை அமைச்சர் சபானா மகமுத் திங்கட்கிழமை (செப்டம்பர் 29) தெரிவித்தார்.
பிரிட்டனில் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்து வருகிறது. அதைச் சமாளிக்கும் வகையில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் அரசாங்கம் தற்போது சில அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
தற்போதைய விதிமுறைப்படி பிரிட்டனில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் தங்கினால் அவர்கள் நிரந்தரமாக அந்நாட்டில் வசிக்க அனுமதி உண்டு.
குற்றச் செயலில் ஈடுபடாத, சமூகப் பாதுகாப்பிற்கு உறுதுணையாக, சலுகைகளை எதிர்பார்க்காத நபர்களுக்கு நிரந்தர வதிவிட உரிமை கொடுக்கும் விதிமுறைகளை வகுத்து வருகிறோம் என்று அமைச்சர் சபானா தெரிவித்துள்ளார்.
மேலும் நிரந்தர வதிவிட உரிமைக்கு விண்ணப்பிக்கும் குடியேறிகள் ஆங்கில மொழியை நன்றாகப் பேசவும் வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.புதிய விதிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது, இவ்வாண்டு இறுதிக்குள் அது அறிவிக்கப்படலாம் என்று அமைச்சர் சபானா தெரிவித்தார்.





