விரைவில் கைதாகும் ஹன்சிகா? மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி

நடிகை ஹன்சிகா மோத்வானி மீது போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய, நீதிமன்றம் மறுத்துள்ளது. நடிகை ஹன்சிகாவை நாத்தனார் கொடுமை வழக்கில் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
ஹன்சிகாவின் திருமணம் ஜெய்பூர் அரண்மனையில் கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்றது. ஹன்சிகாவின் திருமணம் முடிந்து 10 நாட்களுக்குள் அவருடைய சகோதரர் பிரசாந்த் மோத்வானி மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்துக் கோரி விண்ணப்பித்தார்.
ஹன்சிகாவின் சகோதரர் பிரசாந்த் 2021ல் முஸ்கான் நான்ஸி ஜேம்ஸ் என்ற பெண்னை திருமணம் செய்து கொண்டார். ஒரே வருடத்தில் அவர்கள் பிரிந்துவிட்டனர்.
இந்த நிலையில் ஹன்சிகா மோத்வானி மற்றும் தாயார் மேனா மோத்வானி ஆகியோர் தன்னை கொடுமைப் படுத்துவதாகவும், கணவருடன் இணைந்து வாழ முடிவெடுத்தாலும் அதற்கு இவர்கள் இருவரும் தடையாக இருக்கிறார்கள் என்று முஸ்கான் நான்சி மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
முஸ்கானின் புகாரின் அடிப்படையில் மும்பையில் உள்ள அம்போலி காவல் நிலையத்தில் ஹன்சிகா, அவரது சகோதரர் பிரசாந்த் மற்றும் தாயார் மேனா மோத்வானி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கில் இருந்து ஹன்சிகாவும் அவரது தாயார் மேனாவும் கடந்த பிப்ரவரி மாதம் மும்பை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றனர். இதைத் தொடர்ந்து ஹன்சிகாவும், அவரது தாயும், இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில் முஸ்கான் கூறிய அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்து குறிப்பிட்டிருந்தனர். மேலும் முஸ்கானுக்கும் தனது சகோதரனுக்கும் இடையிலான கருத்து வேறுபாடு 2021ம் ஆண்டு முதல் நடந்து வருவதாகவும், அவர்களுக்கிடையிலான மோதல் படிப்படியாக வளர்ந்து 2022-ம் ஆண்டு பரஸ்பர விவாகரத்து பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில் மனு குறித்து மும்பை காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மனுவை தள்ளுபடி செய்து, ஹன்சிகாவுக்கு எதிரான விசாரணை தொடர மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் ஹன்சிகா மீது விசாரணை நடத்த போலீசாருக்கு அனுமதி கிடைத்து இருக்கிறது.
நீதிமன்றம் இப்படி உத்தரவை பிறப்பிக்கும் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்காத ஹன்சிகா இப்போது அதிர்ச்சியில் உள்ளார். விரைவில் ஹன்சிகா விசாரணைக்கு அழைக்கப்பட்டு, தேவைப்பட்டால் கைதும் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
மும்பை உயர்நீதிமன்றம் தான் இவர்களின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. தேவைப்பட்டால் ஹன்சிகா உச்சநீதிமன்றத்தை கூட நாடுவார் என்றும் கூறப்படுகிறது. இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டவர்கள் ஹன்சிகா மோத்வானி என்ன நாத்தனார் கொடுமை எல்லாம் செய்துள்ளாரா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.