ஐடி ஊழியர் கடத்தல் வழக்கு… லட்சுமி மேனனுக்கு முன்ஜாமீன்

ஐடி ஊழியர் கடத்தல் வழக்கில் நடிகை லட்சுமி மேனனை கைது செய்ய ஐகோர்ட் தடை விதித்துள்ளது. முன்ஜாமீன் மனு மீதான விசாரணை ஓணம் விடுமுறைக்குப் பிறகு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24ம் தேதி இரவு பானர்ஜி சாலையில் உள்ள ஒரு பாரில் லட்சுமி மேனன் தரப்புக்கும், ஆலுவாவைச் சேர்ந்த ஐடி ஊழியர் தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதனையடுத்து அன்று இரவு எர்ணாகுளம் வடக்கு ரயில்வே மேம்பாலத்தில், லட்சுமி மேனனுடன் வந்தவர்கள் ஐ.டி ஊழியரை காரில் கடத்திச் சென்று தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பாக வீடியோ வெளியானது.
இதனையடுத்து கடத்தப்பட்ட ஐ.டி ஊழியர் அளித்த புகாரின் அடிப்படையில், லட்சுமி மேனனுடன் இருந்த அனீஷ், மிதுன், சோனாமோள் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கடத்தல், அடித்து சித்ரவதை உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு கைது செய்தனர்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நடிகை லட்சுமி மேனனை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வந்ததை அடுத்து தலைமறைவானார்.
முன் ஜாமீன் கேட்டு கேரளா ஐகோர்ட்டை அணுகினார். இதனையடுத்து ஐ.டி.ஊழியரை தாக்கிய புகாரில் நடிகை லட்சுமி மேனனை கைது செய்ய செப்டம்பர் 17ம் தேதி வரை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.