லோகேஷுக்கு கதை எழுத துப்பில்ல… கூலியை காலியாக்கிய ப்ளூ சட்டை மாறன்

ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் கூலி திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. உச்சக்கட்ட ஹைப்போடு வெளியான அந்தப் படம் சுமாரான வரவேற்பையே பெற்றிருக்கிறது.
ரஜினி ரசிகர்களுக்கு மட்டும் படம் கனெக்ட் ஆகியிருக்கிறது. இந்நிலையில் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் கூலி படத்தின் விமர்சனத்தை வெளியிட்டிருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில்,
“நண்பன் கொலை செய்யப்பட்டதற்கு பழி வாங்க ஹீரோ வருவதுதான் இந்தப் படத்தின் கதை. பான் இந்தியா படம் என்றால் நேட்டிவிட்டியோடு எடுத்து அது நம் ஊரிலும் ஹிட்டாக வேண்டும்; இந்திய அளவிலும், உலக அளவிலும் ஹிட்டாக வேண்டும். அதுதான் பான் இந்தியா ஹிட் என்று சொல்லப்படும்.
ஆனால் ரஜினியோ மற்ற மொழி நடிகர்களை தன் படத்தில் சேர்த்துவிட்டு பான் இந்தியா படம் என சொல்கிறார்.
உடனே இயக்குநரிடம் இந்த ஸ்டார்கள் எல்லாம் படத்தில் இருக்கிறார்கள். எனவே அதற்கு தகுந்தபடி கதை எழுதி வரவும் என்று சொல்லியிருப்பார்கள் போல. கிராமத்தில், ‘கறி வாங்க காசு இல்லாதவனே கருவாட்டை கண்டுபிடித்திருப்பான்’ என்று சொல்வார்கள். அதுபோல் கதை எழுத துப்பு இல்லாத ஒருவர்தான் இந்தக் கதையை எழுதியிருப்பார் என்று தோன்றுகிறது.
லோகேஷ் கனகராஜுக்கு கொலை, கஞ்சா, பவுடர் கடத்துவதை தவிர்த்து எதுவும் தெரியாது. அப்படிப்பட்ட லோகேஷ், இந்த மூன்று மணி நேரத்தை ரசிகர்கள் எப்படி கடத்துவார்கள் என்பதை யோசித்து படம் எடுத்திருந்திருக்கலாம்.
நாகார்ஜுனாவை ஸ்டைலிஷ் வில்லனாக காண்பித்திருக்கிறார்கள். அவருக்கு கீழே சௌபின் சாஹிரை காண்பிக்கிறார்கள். இரண்டு பேரில் சௌபின் மட்டுமே கிடைத்த கேப்பில் ஏதோ செய்திருக்கிறார். ரஜினி நடத்தும் மேன்ஷனில் எதற்காக சிலர் உள்ளேயே இருக்கிறார்கள் என தெரியவில்லை. உபேந்திரா எல்லாம் எவ்வளவு பெரிய டெக்னீஷியன். அவரை அழைத்து வந்து நாசம் செய்திருக்கிறார்கள். அவர் யார் என்றே தெரியவில்லை. கடைசியில் அமீர் கான் வருகிறார். அவர் வந்து பீடியின் சுவைகளை பற்றி பேசுகிறார். இந்தப் படத்தால் ஜெயிலர் படம் நல்ல படமாகிவிட்டது.
பொதுவாக மொக்கை படம் என்று நினைத்து போய் பார்த்தால் அந்தப் படம் நன்றாக இருக்கும். இப்படத்தை நீங்கள் காட்டு மொக்கை என்று நினைத்து பார்த்தாலுமே உங்களுக்கு படம் பிடிக்காது” என்றார்.