பிரபல நடிகை ரன்யா ராவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிப்பு

தங்கக் கடத்தல் வழக்கில் கன்னட நடிகை ரன்யா ராவுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஓராண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது.
ஏற்கனவே நடிகை ரன்யா ராவ் கடந்த மார்ச் மாதம் தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார். ரூ.12.56 கோடி மதிப்புள்ள தங்கத்தை துபாயில் இருந்து சட்டவிரோதமாக கடத்தியதற்காக அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், அவர் வெளிநாட்டுச் செலாவணி மேலாண்மைச் சட்டம் (FEMA) மற்றும் கடத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டுள்ளார்.
மார்ச் மாதம், ரன்யா ராவ் துபாயிலிருந்து பெங்களூரு வந்தபோது, கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர். அவரிடமிருந்து 14.2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த தங்கத்தின் சந்தை மதிப்பு ரூ.12.56 கோடி என அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) அதிகாரிகள் விசாரணை நடத்தி, தங்கக் கடத்தலில் அவரது பங்கை உறுதிப்படுத்தினர்.
அவரது இயற்பெயர் ஹர்ஷவர்தினி ரன்யா, சினிமாவில் ரன்யா ராவ் என்ற பெயரில் அறியப்படுகிறார்.
அதிகாரிகள் குற்றப்பத்திரிகையை சரியான நேரத்தில் தாக்கல் செய்யாததால், நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. இருப்பினும், FEMA மற்றும் கடத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், அவர் இன்னும் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் தான் தங்க கடத்தல் வழக்கில் ரன்யா ராவுக்கு மேலும் ஓராண்டு சிறை தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தண்டனை காலத்தில் ரன்யாவுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதற்கிடையில், அமலாக்கத்துறை (ED) இந்த வழக்கை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் விசாரித்து, ரன்யா ராவின் பெயரில் உள்ள ரூ.34.12 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியது.
இதில் பெங்களூருவின் விக்டோரியா லேஅவுட்டில் உள்ள ஒரு வீடு, ஆர்காவதி லே-அவுட்டில் உள்ள ஒரு மனை, தும்கூரில் ஒரு தொழிற்பேட்டை நிலம் மற்றும் அனேகல் தாலுகாவில் ஒரு விவசாய நிலம் ஆகியவை அடங்கும். இந்த சொத்துக்கள் அனைத்தும் தங்கக் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தில் வாங்கப்பட்டவை என்று ED அதிகாரிகள் தெரிவித்தனர். வழக்கு தொடர்பான விசாரணை தொடர்கிறது.