ஆஸ்திரேலியாவில் அதிர்ச்சி – கர்ப்பமானதை அறிந்த 17 மணி நேரத்திற்குள் குழந்தை பெற்ற பெண்

ஆஸ்திரேலியாவின் கான்பெர்ராவில் வசிக்கும் சார்லோட் சம்மர்ஸ் என்ற இளம்பெண், தான் கர்ப்பமாக இருப்பதை தெரிந்துகொண்ட 17 மணி நேரத்தில் குழந்தையை பெற்ற அபூர்வ சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சார்லோட் சமீபத்தில் ஒவ்வாமை பிரச்னைக்காக மருத்துவமனைக்குச் சென்ற போது, மருத்துவர் ஒருவர் கர்ப்ப பரிசோதனை செய்ய பரிந்துரைத்தார்.
இது சாத்தியமில்லை என நினைத்த சார்லோட், பரிசோதனை செய்த போது தான் ஏற்கனவே கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
மேலும் பரிசோதனையில் சிக்கலான நிலை தென்பட்டதால், உடனடியாக பிரசவத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. குறுகிய நேரத்தில் அவர் ஒரு ஆண் குழந்தைக்கு தாயானார்.
சார்லோட் இதுகுறித்து பேசும் போது, நான் முறையாக மாதவிடாய் பார்த்து வந்தேன். எந்தவித உடல் மாற்றமும் எனக்குத் தெரியவில்லை. எல்லாமே இயல்பாகவே இருந்தது என தெரிவித்துள்ளார்.
மருத்துவ நிபுணர்கள் இதனை கிரிப்டிக் கர்ப்பம் என குறிப்பிடுகின்றனர்.
இது மிக அரிதாகவே நிகழக்கூடிய ஒரு நிலை. இந்த வகை கர்ப்பத்தில், கருப்பையில் உருவாகும் குழந்தை தொப்புள் கொடியின் பின்னால் மறைந்து இருப்பதால், பொதுவாக கர்ப்பத்தின் அறிகுறிகள் வெளிப்படுவதில்லை.
இத்தகைய கர்ப்பங்களில், மாதவிடாயும் வழக்கம்போல நடைபெறும், வயிற்றில் பெரிதாக எந்த மாற்றமும் தெரியாது என மருத்துவர்கள் விளக்குகின்றனர்.
இந்த சம்பவம், பெண்கள் தங்கள் உடலைப் பற்றி தொடர்ந்து கவனிக்க வேண்டும் என்பதையும், தவிர்க்க முடியாத சில உடல் நுட்பங்களை மருத்துவ பரிசோதனைகளே மட்டுமே வெளிக்கொணர முடியும் என்பதையும் நினைவுபடுத்துகிறது.