தென்கொரியாவில் கடத்தப்பட்ட சிறுமி – 44 ஆண்டுகளுக்குப் பிறகு தாயுடன் இணைந்த மகள்

தென்கொரியாவில் தாய் தனது மகளுடன் 44 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
1975ஆம் ஆண்டில் ஹான் டே சூன் என்பவரின் மகள் கியுங் ஹா கடத்தப்பட்டு அமெரிக்காவில் தத்தெடுக்கப்பட்டார்.
கியுங் ஹா வீட்டுக்கருகில் விளையாடிக்கொண்டிருந்தபோது ஹான் கடைக்குச் சென்றார். வீட்டுக்குத் திரும்பியபோது அவருடைய மகளைக் காணவில்லை என்பது தெரிய்வந்தது.
2019ஆம் ஆண்டில் மரபணு ஆராய்ச்சித் தொழில்நுட்பத்தின் உதவியோடு ஹான்னின் மகளைக் கண்டுபிடிக்க முடிந்தது. கியுங் ஹா அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் தாதியாகப் பணிபுரிகிறார்.
அவர் இப்போது லோரி பெண்டர் எனும் பெயரால் அழைக்கப்படுகிறார். தென்கொரிய அரசாங்கம் இந்தச் சம்பவத்துக்கு அதன் வருத்தத்தைத் தெரிவித்தது.
ஆனால் ஹான் தென்கொரிய அரசாங்கத்துக்கு எதிராக வழக்குத் தொடுத்திருக்கிறார். அவருக்கு ஏற்பட்ட மனவுளைச்சலுக்கு இழப்பீடு வழங்கப்படவேண்டும் என்று கூறியிருக்கிறார்.
1950ஆம் ஆண்டுகளிலிருந்து 2000ஆம் ஆண்டுகள் வரை தென்கொரிய அரசாங்கம் சொந்த லாபத்துக்காகக் குழந்தைகளைக் கடத்தி சட்டவிரோதமாகத் தத்தெடுப்பதற்கு மேற்கத்திய நாடுகளிடம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.