அஜித்துக்கு வைக்கப்பட்ட 285 அடி கட் அவுட் விழுந்து நொறுங்கியது…

நெல்லை அஜித் ரசிகர்கள் சார்பாக 285 அடி உயர கட் அவுட் வைக்கப்பட இருந்த சாரம் சரிந்து விபத்துக்குள்ளானது.
நடிகர் அஜித் குமாரின் குட் பேட் அக்லி (Good Bad Ugly) திரைப்படம் ஏப்ரல் 10ந் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது.
இப்படத்தின் ரிலீஸை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் அஜித் ரசிகர்கள் அலப்பறை கிளப்பி வருகின்றனர். அந்த வகையில் நெல்லையில் உள்ள PSS மல்டிபிளக்ஸ் திரையரங்கில் நடந்த ஒரு சாதனை முயற்சி வேதனையில் முடிந்துள்ளது.
குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸை கொண்டாடும் விதமாக, அஜித் ரசிகர்கள் 285 அடி உயரமுள்ள ஒரு மிகப்பெரிய கட்-அவுட் அமைத்தனர். இந்த பணிகள் பெரும் உற்சாகத்துடன் நடைபெற்று வந்த நிலையில், ஏப்ரல் 6ந் தேதி மாலை 6 மணிக்கு, அந்த கட்-அவுட் பாரம் தாங்காமல் திடீரென சரிந்தது.
நல்வாய்ப்பாக இந்த விபத்தில், யாருக்கும் காயமில்லை.
கட்-அவுட் அமைப்பதில் செய்த அலட்சியமே இந்த விபத்துக்கான முக்கிய காரணமாக கூறப்படுகிறது. பொதுவாக, பெரிய அளவிலான கட்-அவுட்களை அமைப்பதற்கு ஒரு சரியான திட்டம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவை. ஆனால், இந்த கட்-அவுட் அமைப்பதற்கு முன், மேல் பகுதிக்கான பணிகள் தொடங்கியதால், அடிப்பகுதியில் அதிக அழுத்தம் ஏற்பட்டிருக்கிறது.
இதன் காரணமாக, கட்-அவுட் நிலை தடுமாறி கீழே விழுந்துவிட்டது. மேலும், வீசும் காற்றின் அழுத்தத்தை சமாளிக்க பேனர்களில் ஓட்டைகள் இல்லாததால், காற்றின் வேகத்தை தாங்க முடியாமல் கட்-அவுட் சரிந்து விழுந்துள்ளது.