30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்

ஒவ்வொரு குடும்பத்தின் ஆணிவேராக இருக்கும் பெண்கள், தினசரி செய்யும் வேலைகளில் ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்ள மறந்துவிடுகின்றனர்.
குடும்பத்தில் எல்லாருடைய ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து கரிசனம் காட்டும் பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் அந்த அக்கறையை காட்டுவதில்லை. இதனால் 30 வயதைக் கடந்ததுமே பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை பெண்கள் எதிர்கொள்கின்றனர்.
அதுவும் உயிருக்கு ஆபத்தான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இதில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் 30 வயதுக்குப் பிறகு பெண்கள் இந்த மூன்று மருத்துவ பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டும்.
ஒரு உலகளாவிய ஆய்வின்படி, சுமார் ஒரு பில்லியன் பெண்கள் (2022ல் ஆய்வு செய்யப்பட்ட மூன்றில் ஒரு பங்கு) நாள் முழுவதும் உடல் வலியில் கழிப்பதாக தெரிவித்திருக்கின்றனர். நான்கில் ஒரு பெண் அல்லது சுமார் 700 மில்லியன் பெண்கள் சுகாதார பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.
குறிப்பாக இந்த பிரச்சனைகள் அவர்களின் அன்றாட வேலைகளையும் நேரடியாக பாதிக்கிறது. இதில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் அவசியம். அவை நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவுகின்றன. தேவையான மருத்துவ சிகிச்சையும் எடுத்து ஆபத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.
பாப் ஸ்மியர் மற்றும் HPV பரிசோதனை
பாப் ஸ்மியர் மற்றும் HPV பரிசோதனை ஒவ்வொரு பெண்ணுக்கும் அவசியம், ஏனெனில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பொதுவாக கடுமையான நிலைக்கு வரும் வரை எச்சரிக்கை செய்யாது. HPV பரிசோதனை பெரும்பாலான கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு காரணமான வைரஸை கண்டறிய உதவுகிறது, அதே நேரத்தில் பாப் ஸ்மியர் புற்றுநோயாக மாறக்கூடிய அசாதாரண செல்களை கண்டறிய உதவுகிறது.
21 வயதில் பாப் ஸ்மியர் தொடங்கி, உங்கள் பரிசோதனை முடிவுகள் சாதாரணமாக இருந்தால், ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் ஒரு முறை செய்துகொள்ள வேண்டும். மேலும், 30 வயதுக்குப் பிறகு ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் HPV பரிசோதனை செய்துகொள்ளலாம் அல்லது இரண்டு பரிசோதனைகளையும் ஒரே நேரத்தில் செய்துகொள்ளலாம்.
மார்பக புற்றுநோய் தடுப்பு பரிசோதனை
30 வயதுக்குப் பிறகு ஒவ்வொரு பெண்ணும் மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மார்பக புற்றுநோய் உலகில் பெண்களிடையே அதிகம் காணப்படும் புற்றுநோயாகும். ஆரம்ப கட்டத்தில் இது கண்டறியப்பட்டால், சிகிச்சை எளிதாக இருக்கும். ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப வரலாறு இருந்தால், 30 வயதுக்குப் பிறகு ஒவ்வொரு 1-2 ஆண்டுகளுக்கும் Mammogram செய்துகொள்ள வேண்டும்.
மேலும், ஒவ்வொரு மாதமும் உங்கள் மார்பகத்தை நீங்களே சோதித்துப் பாருங்கள். உங்கள் மார்பகங்களின் தோற்றம் மற்றும் உணர்வை கவனிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளுங்கள், இதனால் எந்த மாற்றங்கள் அல்லது ஆரம்ப அறிகுறிகள் (ஏதேனும் இருந்தால்) கண்டறிய முடியும். உங்கள் வழக்கமான சுகாதார பரிசோதனையின் போது மருத்துவரிடம் கிளினிக்கல் மார்பக பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.
இரத்த சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் பரிசோதனை
இதய பிரச்சினைகள் வயதானவர்களுக்கு மட்டுமல்ல, இன்றைய காலகட்டத்தில் 30 வயது பெண்களுக்கும் இந்த பிரச்சினை அதிகம் உள்ளது. எனவே, 30 வயதுக்குப் பிறகு இதயம் முதல் சர்க்கரை பிரச்சினை வரை ஏற்படலாம். சர்க்கரையின் ஆரம்ப அறிகுறிகளை கண்டறிய வயிறு காலியாக இருக்கும் போது இரத்த சர்க்கரை பரிசோதனை செய்துகொள்வது சிறந்தது, குறிப்பாக உடல் பருமன், குடும்ப வரலாறு அல்லது பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS) போன்ற ஆபத்து காரணிகள் உள்ளவர்களுக்கு. மேலும், ஒவ்வொரு நான்கு முதல் ஆறு ஆண்டுகளுக்கும் கொலஸ்ட்ரால் பரிசோதனை (லிப்பிட் ப்ரோஃபைல்) தேவைப்படுகிறது. உயர் கொலஸ்ட்ரால் மற்றும் குளுக்கோஸ் அளவுகள் இதய நோய் மற்றும் ஸ்ட்ரோக்கின் ஆபத்தை அதிகரிக்கும்.