ரணிலை கைது செய்து உடனடியாக விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என கோரிக்கை

படலந்த ஆணைக்குழுவின் அறிக்கை ஊடாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நேரடியாக கொலை குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனால் உடனடியாக அவரை கைதுசெய்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என முன்னிலை சோஷலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“படலந்த வதை கூடம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களைக் கைதுசெய்வதற்காக ஜனாதிபதியினால் நேரடியாக உத்தரவிட முடியும். படலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் முன்வைத்து உரையாற்றியபோது, ரணில் விக்ரமசிங்கவின் பெயர் எங்கும் குறிப்பிடப்படவில்லை.
ரணில் விக்ரமசிங்க இந்த சம்பவத்துக்கு பொறுப்புக்கூற வேண்டிய முக்கிய நபராவார். தேர்தலுக்கு பணம் வழங்குபவர்கள் என்பதால் டட்லி சிறிசேன, ஹனீப் யூசுப் போன்றவர்களின் பெயர்களும் கூறப்படவில்லை என்பதை ஊகித்துக் கொள்ளமுடியும்.
அத்துடன், சபையில் உணர்ச்சிப்பூர்வமாக இந்த ஆணைக்குழுவின் அறிக்கையை முன்வைத்த அரசாங்கம், தங்களது தலைவர்களைக் கொலை செய்தவர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதில் எதற்காகப் பின்வாங்குகிறது?
அனைத்து சாட்சிகளையும் தன்னகத்தே கொண்டுள்ள அரசாங்கம் அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல், பொதுமக்களின் பார்வைக்காக அதனைக் காட்சிப்படுத்துகிறது.
1948 ஆம் ஆண்டின் சட்டத்துக்கமையவே, தமது நண்பரான ரணில் விக்ரமசிங்கவை பாதுகாப்பதற்கே சந்திரிக்கா படலந்த ஆணைக்குழுவை ஸ்தாபித்தார்.
குறித்த சட்டத்தின் கீழ், பிரஜாவுரிமையை நீக்குவதற்கான அதிகாரம் அந்த ஆணைக்குழுவுக்கு கிடையாது.
நிறைவேற்று அதிகாரத்தையும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டுள்ள இவர்கள் என்ன காரணத்தை கூறிக் கொண்டு உள்ளுராட்சி தேர்தல் மேடைகளில் ஏறப்போகின்றனர் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
எது எவ்வாறாயினும், படலந்த சம்பவத்துடன் தொடர்புடைய ரணில் விக்ரமசிங்கவை கைதுசெய்து விசாரிப்பதன் ஊடாக இதற்கு உரிய தீர்வினை பெறமுடியும்” என முன்னிலை சோஷலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார்.