கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவும் இயற்கையான பானங்கள்

நமது உடல் ஆரோக்கியமாக இருந்து, சீராக செயல்பட வேண்டுமானால், உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் நல்ல முறையில் இயங்க வேண்டும். இந்த உறுப்புகளின் இயக்கத்தை கண்காணித்து அவற்றின் ஆரோக்கியத்தை நாம் அவ்வப்போது உறுதி செய்துகொள்ள வேண்டும். கல்லீரல் பாதுகாப்பு பற்றியும் அதில் உள்ள நச்சுகளை நீக்க நாம் பயன்படுத்தக்கூடிய சில இயற்கையான வழிகள் பற்றியும் இந்த பதிவில் காணலாம்.
கல்லீரல் பாதிப்பு ஏன் ஏற்படுகின்றது?
கல்லீரல் பாதிப்பு என்பது மது அருந்துவதால் மட்டும் ஏற்படுவதில்லை. தவறான உணவுப் பழக்கவழக்கங்களும் மருத்துவ நிலைமைகளும் இந்தக் கோளாறுக்குக் காரணமாகின்றன. பழுதடைந்த கல்லீரலுடன் வாழ்வது மிகவும் கடினம். ஆகையால், அதை ஆரோக்கியமாக வைத்திருக்க, அவ்வப்போது இயற்கையான வழியில் அதில் உள்ள நச்சுகளை நீக்கும் நடவடிக்கைகளை எடுப்பது மிகவும் முக்கியம்.
பொதுவாக கல்லீரல் பழுதடைவதற்கு மதுபானம் மட்டுமே காரணமாக கருதப்படுகிறது. ஆனால் நாம் உட்கொள்ளும் துரித உணவுகளும், வறுத்த மற்றும் ஜங்க் உணவுகளும் கல்லீரலில் கழிவுகள் சேர காரணமாகின்றன.
கல்லீரலை சுத்தப்படுத்துவது எப்படி?
கல்லீரலுக்கு ஓரளவுக்கு தன்னைத்தானே சுத்தம் செய்து கொள்ளும் திறன் உள்ளது. இருப்பினும், தோலில் அரிப்பு, அடர் நிற சிறுநீர், எப்போதும் சோர்வான உணர்வு, குமட்டல் அல்லது வாந்தி, வயிற்றில் வலி அல்லது வீக்கம், தோல் மஞ்சள் நிறமாக மாறுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால், உங்கள் கல்லீரலுக்கு உங்கள் உதவி தேவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதைப் புறக்கணிப்பது ஆபத்தான நோய்களுக்கு வழிவகுக்கும்.
கல்லீரலில் உள்ள நச்சுகளை நீக்குவதற்கான இயற்கை வைத்தியம்
புதினா தேநீர்
புதினா தேநீர் கல்லீரலுக்கு நன்மை பயக்கும். புதினா இலைகளில் மெந்தோல் மற்றும் மெந்தோன் போன்ற அத்தியாவசிய எண்ணெய்கள் நிறைந்துள்ளன. அவை நச்சு நீக்கும் செயல்பாடுகளைச் செய்ய உதவுவதோடு செரிமானத்திற்கும் உதவுகின்றன. புதினா தேநீர் தயாரிக்க, ஒரு கிண்ணத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் 2 தேக்கரண்டி புதினா இலைகளைச் சேர்க்கவும். இதை சிறிது நேரம் இப்படியே விட்டுவிட்டு, இரவில் தூங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் குடிக்கவும்.
மஞ்சள் தேநீர்
மஞ்சள் பல நூற்றாண்டுகளாக ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படும் ஒரு சக்திவாய்ந்த மசாலாப் பொருளாகும். மஞ்சள் தேநீர் அருந்துவது கல்லீரல் உட்பட உடல் முழுதும் உள்ள நச்சுகளை நீக்க பெரிதும் உதவுகிறது. இதைச் செய்ய, ஒரு கிளாஸ் கொதிக்கும் நீரில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து, தேன் சேர்க்கவும்.
இஞ்சி எலுமிச்சை தேநீர்
இஞ்சி மற்றும் எலுமிச்சை கலவையானது சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது உங்கள் உடலில் உள்ள நச்சுகளை நீக்குவது மட்டுமல்லாமல் எடை இழப்பு செயல்முறையையும் துரிதப்படுத்துகிறது. இந்த கலவை வீக்கத்தைக் குறைக்கவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், நோயைத் தடுக்கவும் உதவுகிறது. இதைச் செய்ய, ஒரு கிளாஸ் கொதிக்கும் நீரில் அரை எலுமிச்சை சாறு மற்றும் ஒரு துண்டு இஞ்சி சேர்க்கவும். இதை ஆற வைத்து குடிக்கவும்.
வெந்தய நீர்
வெந்தய நீரை தொடர்ந்து உட்கொள்வது எடையைக் குறைக்கவும், செரிமான அமைப்பை வலுப்படுத்தவும் உதவுகிறது. இதில் நார்ச்சத்து மற்றும் ஆண்டிஆக்சிடெண்டுகள் நிறைந்திருப்பதால் குடல் இயக்கத்திற்கு உதவுகிறது. இந்த எளிதில் தயாரிக்கக்கூடிய நச்சு நீக்க பானத்தைத் தயாரிக்க, ஒரு கிளாஸ் கொதிக்கும் நீரில் ஒரு டீஸ்பூன் வெந்தயப் பொடியைச் சேர்க்கவும். இதை இப்படியே 15 நிமிடங்கள் விடவும். இந்த தண்ணீரை ஒரு கோப்பையில் வடிகட்டி ஒரு நாளைக்கு மூன்று முறை குடிக்கவும்.
கெமோமில் தேநீர்
கெமோமில் தேநீர் ஒரு சக்திவாய்ந்த ஆண்டிஆக்சிடெண்ட் ஆகும். இது மன அழுத்தத்தைக் குறைத்து தூக்கத்தை மேம்படுத்த உதவும். இது நரம்பு மண்டலத்தை சீராக்க உதவுகிறது. அதை தயாரிக்க, ஒரு கிளாஸ் கொதிக்கும் நீரில் 1 தேக்கரண்டி கெமோமில் பூக்களைச் சேர்க்கவும். இதை 10 நிமிடங்கள் மூடி வைத்து, பின்னர் குடிக்கவும். அதன் நன்மைகளைப் பெற, குறைந்தது இரண்டு வாரங்களுக்கு ஒவ்வொரு நாளும் அதை உட்கொள்ளுங்கள்.