நான் Incredible இளையராஜா” – லண்டன் புறப்பட்ட இளையராஜா பேட்டி

இது என்னுடைய பெருமை அல்ல. நாட்டின் பெருமை. இந்தியாவின் பெருமை. Incredible இந்தியா மாதிரி, நான் Incredible இளையராஜா” என இசையமைப்பாளர் இளையராஜா பேசியுள்ளார்.
‘வேலியன்ட்’ (Valiant) என்னும் தலைப்பில் இசைஞானி இளையராஜா இயற்றியிருக்கும் சிம்பொனி 2025 மார்ச் 8ஆம் தேதி லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் நேரடி நிகழ்ச்சியாக முதன்முறையாக அரங்கேற்றப்பட உள்ளது. இந்தியாவின் முதல் சிம்பொனி வெளிவர உள்ளது.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்காக இன்று லண்டன் புறப்பட்டார் இசையமைப்பாளர் இளையராஜா. முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அனைவருக்கும் வணக்கம். இந்தப் புதிய சிம்போனியை வெளியிடுவதற்காக லண்டன் செல்கிறேன்.
உலகலேயே தலைசிறந்த இசைக்குழுவினர் வாசித்து, ரசிகர்கள் கேட்டு மகிழ்ந்து, இந்த இசையை 8-ம் தேதி வெளியிட இருக்கிறோம். அப்பல்லோ அரங்கில் இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
வந்துள்ள ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய இசை விருந்தாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. தமிழராக உணர்கிறேன் என்பதை விட மனிதராக உணர்கிறேன். இது என்னுடைய பெருமை அல்ல. நாட்டின் பெருமை. இந்தியாவின் பெருமை. Incredible இந்தியா மாதிரி, Incredible இளையராஜா” என்றார்.
முன்னதாக இசையமைப்பாளர் தேவா தனது பாடல்களுக்கு காப்பி ரைட் வேண்டாம் என கூறிவிட்டாரே என்ற கேள்வி இளையராஜாவிடம் கேட்க்கப்பட்டது. அதற்கு அவர், “அனாவசியமான கேள்வி என்னிடம் கேட்க கூடாது” என்றார்.