மலேசியாவின் கினாபாலு மலையிலிருந்து இறங்கும் போது உயிரிழந்த பிரிட்டிஷ் மலையேறி

கினபாலு மலையிலிருந்து இறங்கிக்கொண்டிருந்த பிரிட்டிஷ் மலையேறி ஒருவர் உயிரிழந்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த நபர் 70 வயதுக்கும் 80 வயதுக்கும் இடைப்பட்டவர் என்று மலேசிய அதிகாரிகள் கூறினர்.
இத்துயரச் சம்பவம் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 25) மலேசியாவின் சாபா மாநிலத்தில் உள்ள கினபாலு மலையில் நிகழ்ந்தது.
காலை 7.17 மணி அளவில் அவசரநிலை அழைப்பு கிடைத்ததாக ரனாவ் தீயணைப்பு, மீட்பு நிலையத்தின் தலைவரான உதவிக் கண்காணிப்பாளர் ரிட்வான் முகம்மது தயீப் கூறினார்.
மலைகளில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபடும் பிரிவைச் சேர்ந்த நால்வர், சாபா பூங்காக்கள் மீட்பு, சேவைப் பிரிவைச் சேர்ந்த ஐவர், சாபா சுகாதாரத்துறையைச் சேர்ந்த மூவர், மலையேற்ற வழிகாட்டிகள் மூவர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
மீட்புக் குழு காலை 10.15 மணிக்குச் சம்பவ இடத்தை அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.சுயநினைவின்றி கிடந்த நபவருக்கு முதலுதவி வழங்கப்பட்டதாக ரிட்வான் கூறினார்.
பிறகு அவர் தூக்குப் படுக்கையில் வைக்கப்பட்டு மலையடிவாரத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
சுயநினைவு திரும்பாமலேயே அந்த நபர் மாலை 5.08 மணி அளவில் உயிரிழந்ததாக மருத்துவ அதிகாரிகள் கூறினர்.அந்த நபரின் உடல் சாபா காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.