நேட்டோ உறுப்பினர் பதவிக்கு ஈடாக அதிபர் பதவியை விட்டுக்கொடுக்க தயார் ;ஜெலென்ஸ்கி

உக்ரேனை நேட்டோ உறுப்பினராக்கினால் அதிபர் பதவியிலிருந்து தாம் விலகத் தயாராக இருப்பதாக உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 23) தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், அவரைக் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், ஸெலென்ஸ்கி இவ்வாறு கூறியுள்ளார்.
உக்ரேன் மீது ரஷ்யா படை எடுத்து பிப்ரவரி 24ஆம் திகதியுடன் மூன்று ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமர் புட்டினை அதிபர் டிரம்ப் சந்திக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.அதற்கு முன்னதாக அதிபர் டிரம்ப்பைச் சந்தித்துப் பேச விரும்புவதாக அதிபர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்த உடன்படிக்கையின் ஒரு பகுதியாக உக்ரேன் நேட்டோவில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்று அதிபர் ஸெலென்ஸ்கி நீண்டகாலமாகவே கூறி வருகிறார்.ஆனால் அமெரிக்கத் தலைமையில் செயல்படும் ராணுவக் கூட்டணியான நேட்டோ ஆர்வம் காட்டுவதாகத் தெரியவில்லை.
அமெரிக்க, ரஷ்ய அதிகாரிகள் கடந்த வாரம் சவூதி அரேபியாவில் சந்தித்துப் பேசியதிலிருந்து அதிபர் டிரம்ப்புக்கும் அதிபர் ஸெலென்ஸ்கிக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.
ரஷ்யாவைத் தனிமைப்படுத்த இலக்கு கொண்ட உக்ரேனிய, ஐரோப்பியத் தலைவர்களுக்கு அமெரிக்க, ரஷ்ய அதிகாரிகளிடையிலான சந்திப்பு அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அதிபர் ஸெலென்ஸ்கியை சர்வதிகாரி என்று அதிபர் டிரம்ப் வர்ணித்துள்ளார். பெரும்பாலான உக்ரேனிய மக்கள் அவரை ஆதரிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.ஆனால் அதிபர் டிரம்ப்பின் இக்கருத்துகள் தமது மனதைக் காயப்படுத்தவில்லை என்று குறிப்பிட்ட ஸெலென்ஸ்கி, உக்ரேனில் ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்ததும் மீண்டும் தேர்தலில் போட்டியிட இருப்பதாகக் கூறினார்.
உக்ரேனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பரஸ்பர புரிந்துணர்வு அவசியம் என்று அதிபர் ஸெலென்ஸ்கி கூறினார்.அதுமட்டுமல்லாது, உக்ரேனின் பாதுகாப்புக்கு அமெரிக்க அதிபர் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றார் அவர்.