வெடிகுண்டு மிரட்டல் – இத்தாலியில் அவசரமாகத் தரையிறங்கிய அமெரிக்க விமானம்

அமெரிக்காவின் நியூ யார்க் நகரிலிருந்து புது டில்லிக்குச் சென்றுகொண்டிருந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் இத்தாலியின் ரோம் நகரத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
வெடிகுண்டு அச்சுறுத்தலால் இவ்வாறு விமானம் ரோம் நகரத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
199 பயணிகளை ஏற்றிச்சென்ற விமானத்துக்குப் பாதுகாப்பாக அதற்கு முன்னர் இத்தாலிய ஆகாயப்படையின் இரு விமானங்கள் சென்றுள்ளது.
விமானம் சோதனை செய்யப்பட்டு பின்னர் மீண்டும் புறப்பட அனுமதி வழங்கப்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்தது. ஆனால் வெடிகுண்டு மிரட்டல் குறித்த மேல் விவரங்களை நிறுவனம் பகிரவில்லை.
விமானம் தரையிறங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பு பாதுகாப்புக் காரணங்களுக்காக அது ரோம் நகருக்குத் திசை திருப்பப்படுவதாய் விமானி அறிவித்தார் என பயணி ஒருவர் கூறினார்.
ரோம் சென்றடைந்ததும் பயணிகள் பாதுகாப்புச் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் பயணி சொன்னார்.
சம்பவத்தினால் ரோம் விமான நிலையத்தின் செயல்பாடுகளில் பாதிப்பு நேரவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.