கார் ரேஸில் 3ஆவது இடம் பிடித்து துபாயில் மாஸ் காட்டிய அஜித்
அஜித் குமாரை ஒரு நடிகரையும் தாண்டி அவர் ஒரு ரேஸர் என்பது ஒட்டு மொத்த உலகத்திற்கும் தெரியும். சினிமாவில் எத்தனையோ சாதனைகளை படைத்தாலும் அவருக்கு பைக் மற்றும் கார் ரேஸ் தான் உயிர்.
இது தான் தனது லட்சியம் என்று கூட அவர் சொல்லியிருக்கிறார். இதற்காக சினிமாவையும் தள்ளி வைத்தவர் தான் அஜித்.
சினிமாவில் பைக் மற்றும் கார் ரேஸ்களில் கலந்து கொள்ளும் ஒரே ஒரு நடிகர் என்றால் அது அஜித் குமாராகத்தான் இருக்கும். தற்போது துபாயில் கார் ரேஸ் நடைபெற்று வரும் நிலையில் இதில் அஜித்குமார் கலந்து கொண்டார்.
கார் ரேஸ் தொடங்குவதற்கு முன் பயிற்சியின் போது அஜித் விபத்தில் சிக்கினார். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்பட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த கார் ரேஸ்காக தனது உடல் எடையை கூட அஜித் குறைத்திருக்கிறார். அந்தளவிற்கு கார் ரேஸ் மீது அன்பு கொண்ட அஜித், ஒரு கட்டத்தில் கார் ரேஸிலிருந்து விலகுவதாக அறிவித்தார். ஆனால், அவர் சொல்லி கொஞ்ச நேரத்திலேயே மீண்டும் கார் ரேஸில் கலந்து கொண்டது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
கடந்த 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற ஃபார்முலா ஆசிரிய பிஎம்பிடள்யூ சாம்பியன்ஷிப் போட்டியிலும், 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப் உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடியுள்ளார். இந்த நிலையில் தான் துபாயில் நடைபெற்று வரும் கார் ரேஸில் கலந்து கொண்டுள்ளார். சோதனை ஓட்டத்தின் போது கார் தடுப்பு சுவரில் மோதி விபத்து ஏற்படுத்தியது. இதில் அஜித்துக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.
இந்த நிலையில் தான் இன்று நடைபெற்ற 24ஹெச் கார் ரேஸ் 991 பிரிவில் அஜித் குமார் ரேஸிங் அணி கலந்து கொண்டு 3ஆவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. இது குறித்து அஜித் குமாரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:
பிரேக் ஃபெயிலியர் காரணமாக ஏற்பட்ட விபத்துக்கு பிறகு என்ன கம்பேக். 991 பிரிவில் 3ஆவது இடம் மற்றும் ஜிடி4 பிரிவில் ஸ்பிரிட் ஆஃப் தி ரேஸ் என்று குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கார் ரேஸில் அஜித் குமார் 3ஆவது இடம் பிடித்ததை அவருடன் இணைந்து அவரது ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். இவ்வளவு ஏன் நடிகர் மாதவன் நேரில் சென்று அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.