தெறி ஹிந்தி ரீமேக்கின் முதல்நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தமிழில் இயக்குனர் அட்லீ, தளபதி விஜய்யை வைத்து இயக்கிய திரைப்படம் தான் ‘தெறி’. கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை, கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார்.
இந்த திரைப்படம், சுமார் 75 கோடி பட்ஜெட்டில் உருவாகி 150 கோடி வரை வசூல் சாதனை படைத்தது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகே தளபதியை வைத்து அடுத்தடுத்து மெர்சல், பிகில் என 3 படங்களை தொடர்ச்சியாக இயக்கி ஹார்டிக் வெற்றியை பதிவு செய்தார் அட்லீ.
‘தெறி’ திரைப்படம் வெளியாகி 8 வருடங்கள் ஆகும் நிலையில், இந்த படத்தை இயக்குனர் அட்லீ ஹிந்தியில் தயாரிக்க முடிவு செய்தார். அதன்படி இயக்குநர் ஏ.காளீஸ் இயக்கத்தில், ‘பேபி ஜான்’ என்கிற பெயரில் உருவான இந்த படம் கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, டிசம்பர் 25-ஆம் தேதி ரிலீஸ் ஆனது.
இப்படத்தில் நடிகர் வருண் தவான் ஹீரோவாக நடிக்க, கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி, ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், மணிகண்டன், உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில் இப்படத்தின் முதல் கட்ட வசூல் நிலவரத்தை படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி ரூ. 11.25 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. வார இறுதி நாட்கள் வர உள்ளதால் வசூல் அதிகரிக்கும் என திரையரங்கு உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..