மே 9 வன்முறை சம்பவம் தொடர்பில் இம்ரான் கான் ஆதரவாளர்கள் 25 பேருக்குச் சிறை
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 2023 மே 9ஆம் திகதி வன்முறையில் ஈடுபட்டதற்காக அவரின் ஆதரவாளர்கள் 25 பேருக்கு ஈராண்டு முதல் 10 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் சனிக்கிழமை (டிசம்பர் 21) அறிவித்தது.
அந்த வன்முறைச் சம்பவத்தின்போது இம்ரான் கான் ஆதரவாளர்கள் அரசாங்கக் கட்டடங்களுக்குள்ளும் ராணுவ நிலைகளுக்குள்ளும் புகுந்தனர். இதில் குறைந்து எட்டுப் பேர் உயிரிழந்தனர்.
இந்த விவகாரம் தொடர்பில் முதற்கட்ட விசாரணையின் ஒரு பகுதியாக ராணுவ நீதிமன்றம் இந்தத் தண்டனையை விதித்தது. முன்னதாக, வன்முறையில் ஈடுபட்ட 85 பேருக்குத் தண்டனை விதிக்க ராணுவ நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி அளித்திருந்தது.
மே 9 வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக இம்ரான் கானின் பிடிஐ அரசியல் கட்சி உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர். வன்முறையில் தனக்குச் சம்பந்தம் இருப்பதாகக் கூறப்படுவதை பிடிஐ பகிரங்கமாக மறுத்து வந்துள்ளது. எனினும், பிடிஐ கட்சியினரால் தாக்குதல் நன்கு திட்டமிடப்பட்டதாக அரசாங்கமும் ராணுவமும் உறுதிப்பட கூறுகின்றன.
இம்ரான் கானும் அவரது கட்சியினரும் மே 9 சம்பவம் தொடர்பில் நீதிமன்ற விசாரணை நடத்தும்படி வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், ராணுவ நீதிமன்றத்தின் முடிவை பிடிஐ கண்டித்துள்ளது. நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உமர் அய்யுப் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “குடிமக்களுக்கு எதிராக ராணுவ நீதிமன்றம் விதித்துள்ள தண்டனை செல்லுபடியாகாது,” என்றார்.