திரிஷாவுக்கு நடிகர் சூர்யா டீம் கொடுத்த இன்ப அதிர்ச்சி
திரையுலகில் ஹீரோயினாக 22 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நடிகை திரிஷாவுக்கு சூர்யா 45 படக்குழுவினர் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
தற்போது திரிஷாவுக்கு வயது 40க்கு மேல் ஆனாலும் தமிழ் சினிமாவில் தற்போது அதிக படங்களை கைவசம் வைத்துள்ள ஹீரோயின் அவர்தான். அதுமட்டுமின்றி அதிக சம்பளம் வாங்கும் ஹீரோயினும் திரிஷா தான். அவர் ஒரு படத்துக்கு ரூ.12 கோடி சம்பளமாக வாங்கி வருகிறார்.
தற்போது, லேட்டஸ்டாக ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகும் சூர்யா 45 திரைப்படத்திலும் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆனார்.
சூர்யாவுடன் மெளனம் பேசியதே, ஆறு போன்ற படங்களில் நடித்துள்ள திரிஷா தற்போது மூன்றாவது முறையாக அவருடன் கூட்டணி அமைத்துள்ளார். இப்படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளை ஜிகே விஷ்ணு கவனிக்க, இசையமைப்பாளராக சாய் அபயங்கர் கமிட்டாகி உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கோவை, பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவாட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
அண்மையில் கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக கோவா சென்றிருந்த திரிஷா, அங்கிருந்து நேரடியாக கோவைக்கு சென்று சூர்யா 45 படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.
அப்போது ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த திரிஷாவுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற சூர்யா, அவர் திரையுலகில் 22 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதை படக்குழுவோடு சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினார். அதன் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.