‘Trinity Laban’ இசைப்பள்ளியின் கௌரவத் தலைவராக நியமனம் பெற்றார் ஏ.ஆர்.ரகுமான்
இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான முதல் படத்திலேயே தேசிய விருதை தனதாக்கிக்கொண்ட இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக தன்னுடைய மெய் மறக்க வைக்கும் இசையால் ரசிகர்கள் உள்ளங்களை சூறையாடி வருகிறார்.
இவருடைய பாடல்கள், பலருக்கு ஒரு முறை கேட்டால் பிடிக்காது கேட்க கேட்க தான் பிடிக்கும். இசையில் தொடர்ந்து பல சாதனைகளை செய்து வரும் ஏ.ஆர்.ரகுமான், தென்னிந்திய பிரபலங்களுக்கு எட்டா கனியாக இருந்த ஆஸ்கர் விருதை வென்றார்.
மக்களை மகிழ்விக்க தன்னுடைய இசை பணியை தொடர்ந்து வரும் ஏ.ஆர்.ரகுமானுக்கு தற்போது முக்கிய பெருமை ஒன்றும் கிடைத்துள்ளது. அதாவது இவர் “இசை நாடகம் மற்றும் சமகால நடனத்திற்கான கன்சர்வேட்டரியான டிரினிட்டி லாபனின் கௌரவத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்”.
“இசை, நடனம் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை மனித வெளிப்பாட்டின் பரந்த தன்மையை ஆராய்வதற்கு முதன்மையான யுகத்தில் நாம் வாழ்கிறோம்” என்று ஏஆர் ரஹ்மான் அங்கு பேசியுள்ளார்.
மேலும் இதுகுறித்து தெரிவித்துள்ள டிரினிட்டி லாபன் “இன்று, உலக அளவில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானை டிரினிட்டி லாபனின் கெளரவத் தலைவராக அறிவிக்கும் பெருமை எங்களுக்குக் கிடைத்துள்ளது. ஏ.ஆர். ரஹ்மானுடனான எங்கள் ஒத்துழைப்பு, 2008 ஆம் ஆண்டு துவங்கியது. அவர் KM மியூசிக் கன்சர்வேட்டரியை நிறுவியபோதில் இருந்து தொடர்கிறது. இந்த ஆண்டு, டிரினிட்டி லாபன் முறைப்படி கூட்டு சேர்ந்துள்ளது. கேஎம்எம்சி, மாணவர்கள் தங்கள் படிப்பை சென்னைக்கும் லண்டனுக்கும் இடையில் பிரிக்கும் வாய்ப்பை வழங்குகிறது. எல்லைகளைத் தாண்டி கருத்துக்கள் மற்றும் மரபுகளின் பரிமாற்றத்தை வளர்க்கிறது.” என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.