நயன் மீது தனுஷ் தொடர்ந்த வழக்கு; அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்
நயன்தாரா – விக்னேஷ் சிவனின் காதல் கதை நானும் ரெளடி தான் படத்தில் இருந்து தொடங்கியது என்பது அனைவரும் அறிந்ததே. இந்தப் படத்தில் இடம்பெற்ற காதல் பாடல்கள் அனைத்தையும் நயன்தாரா மீதுள்ள காதலை வெளிப்படுத்தும் விதமாக விக்னேஷ் சிவன் எழுதி இருந்தார்.
இதனால் இந்த படத்தின் பாடல் வரிகளை தனது ஆவணப்படத்தில் பயன்படுத்த விரும்பிய நயன்தாரா, அதற்காக நானும் ரெளடி தான் படத்தின் தயாரிப்பாளர் தனுஷை அணுகி இருக்கிறார்.
ஆனால் அதற்கு தடையில்லா சான்று வழங்க மறுத்துள்ளார் தனுஷ். இதனால் அந்த பாடல் காட்சிகள் இல்லாமல் தனது ஆவணப்படத்தை கடந்த நவம்பர் 18-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்தார் நயன்தாரா.
அந்த ஆவணப்படத்தில் நானும் ரெளடி தான் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சில காட்சிகள் இடம்பெற்று இருந்தன. இதனால் அனுமதியின்றி அந்த காட்சிகளை பயன்படுத்தியதற்காக ரூ.10 கோடி நஷ்ட ஈடு வழங்கக்கோரி நயன்தாராவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதோடு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருந்தார் தனுஷ்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு தொடர்பாக ஜனவரி 8-ந் தேதிக்குள் நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அன்றைய தேதிக்கு ஒத்திவைத்தார்.
அன்று இந்த வழக்கின் இறுதி விசாரணை நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் நயன்தாரா என்ன விளக்கம் கொடுக்கபோகிறார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.