இலங்கையில் மைனா நந்தினிக்கு நடந்த மோசமான சம்பவம் – நடுத்தெருவுக்கு வந்த சோகம்
விஜய் டிவி சீரியல் மூலம் பிரபலமான மைனா நந்தினி, தற்போது தாங்கள் பொருளாதார ரீதியாக ஜீரோ ஆகிவிட்டதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவர் நந்தினி. அந்த சீரியலில் இவர் நடித்த மைனா கேரக்டர் பட்டிதொட்டியெங்கும் ஹிட் ஆனதால் அவரை ரசிகர்கள் செல்லமாக மைனா நந்தினி என அழைக்கத் தொடங்கினர். சீரியலை போல் சினிமாவிலும் கலக்கிய நந்தினி, இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய வம்சம் படத்தில் காமெடி வேடத்தில் நடித்திருந்தார். அதன்பின்னர் பாண்டிராஜின் கேடி பில்லா கில்லாடி ரங்கா, நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்களிலும் இவர் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து அசத்தினார்.
இதுதவிர விஜய் டிவியில் புகழ் பெற்ற ரியாலிட்டி ஷோவாக விளங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றார் நந்தினி. அதன் 6-வது சீசனில் கலந்துகொண்ட இவர், அந்நிகழ்ச்சிக்கு பின்னர் சின்னத்திரை பக்கம் தலைகாட்டாமலே இருந்து வந்தார். இதற்கு காரணம் யூடியூப்பில் இவர் தொடங்கிய மைனா விங்ஸ் என்கிற சேனலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதில் தற்போது இவருக்கு 16 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர்.
மேலும் லவ் ஆக்ஷன் டிராமா என்கிற மற்றொரு யூடியூப் சேனலை தொடங்கி, அதில் குறும்படங்களை வெளியிட்டு வந்தார் நந்தினி. அவர் அந்த யூடியூப் சேனலில் ரிலீஸ் செய்த குறும்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து, வெப் தொடர் ஒன்றை வெளியிட திட்டமிட்டு, அதற்கு புள்ளத்தாச்சி என பெயரிட்டு, அதில் கர்ப்பிணி பெண்ணாக மைனா நடித்து, அந்த வெப் தொடரை வார வாரம் ஒரு எபிசோடு வெளியிட்டு வந்தனர்.
அந்த வெப் தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அதை பாதியில் நிறுத்திவதாக மைனா நந்தினி அறிவித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. ஏனெனில் அந்த வெப் தொடரின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை அண்மையில் இலங்கை சென்றிருந்தபோது படமாக்கி இருக்கின்றனர். அதில் பல லொகேஷன் சென்று, அங்கு படமாக்கி, அதை ஒரு ஹார்டு டிஸ்கில் போட்டு இந்தியாவுக்கு கொண்டுவந்திருக்கிறார்கள்.
மொத்தமாக 800 ஜிபி அளவு புட்டேஜை இலங்கையில் படமாக்கி இருக்கிறார்கள். அதை இந்தியா கொண்டுவந்தபோது அந்த ஹார்டு டிஸ்க் தவறுதலாக கீழே விழுந்திருக்கிறது. அதன்பின்னர் அதை சிஸ்டத்தில் போட்டு பார்த்தபோது அது வேலை செய்யவில்லையாம். தொழில்நுட்ப ரீதியாக ஏதேதோ முயற்சி செய்து பார்த்தும் அதில் உள்ள காட்சிகளை மீட்க முடியவில்லையாம். இதனால் தங்கள் உழைப்பு மற்றும் பணம் வீணாகிவிட்டதாக மைனா மற்றும் அவரது கணவர் யோகேஸ்வரம் தெரிவித்துள்ளனர்.
மொத்தம் 11 நாட்கள் நடத்திய படப்பிடிப்புக்கான காட்சிகள் மொத்தமும் போனதோடு, அதை படமாக்க யூடியூப்பில் தாங்கள் சம்பாதித்த பணம் மொத்தத்தையும் செலவு செய்தது மட்டுமின்றி, மேலும் கைகாசையும் போட்டு எடுத்ததாகவும், தற்போது அதை மீட்க லட்சக்கணக்கில் செலவாகும் என சொல்கிறார்கள், ஆனால் அதற்கு செலவிட காசு இல்லாமல் ஜீரோவாகி இருக்கிறோம் என இருவரும் எமோஷனலாக பேசி இருக்கின்றனர். இதனால் இனி புள்ளத்தாச்சி வெப் தொடரின் அடுத்தடுத்த எபிசோடுகள் வராது என்பதையும் அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். இதைப்பார்த்த ரசிகர்கள் அவர்களுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.