இலங்கை: போதைப்பொருள் பிரச்சனைக்கு எதிராக இளைஞர்களை ஊக்கப்படுத்துவது தேசத்தின் கடமை: பிரதமர்

சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் மனங்களில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் போதைப்பொருள் பிரச்சனைக்கு எதிராக போராடுவது நாட்டின் பொறுப்பாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டுக்கான அகில இலங்கை கலை மற்றும் அனிமேஷன் காணொளிப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனை தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு, பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளைத் தூண்டுவதன் மூலம் நாட்டின் எதிர்காலத்திற்கு கடுமையான அச்சுறுத்தலாக இருக்கும் தேசிய மற்றும் சர்வதேச போதைப்பொருள் கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்கு சட்ட அமலாக்க முயற்சிகள் முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இலங்கை கடற்படை மற்றும் பாதுகாப்புப் படையினரின் சேவைகளைப் பாராட்டிய பிரதமர், போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை எதிர்த்துப் போராடுவதற்கும், அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கும் ஒரு வேலைத்திட்டத்தின் அவசரத் தேவையை எடுத்துரைத்தார்.
போதைப்பொருளின் தீமைகள் பற்றி அவர்களுக்கு தெரிவிப்பதோடு, அவர்களின் ஆக்கப்பூர்வமான திறமைகளை வெளிக்கொணரும் சந்தர்ப்பங்களை வழங்குவதன் மூலம் வலுவான எதிர்காலத்தை கட்டியெழுப்ப குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என்றும் பிரதமர் அமரசூரிய தெரிவித்தார்.