அமெரிக்க ஜனாதிபதியாக ஆட்சிக்கு வந்தவுடன் டிரம்ப் எடுக்கவுள்ள அதிரடி நடவடிக்கை
அமெரிக்க ஜனாதிபதியாக ஆட்சிக்கு வந்தவுடன் இராணுவத்தில் பணியாற்றும் மூன்றாம் பாலினத்தவர்களை பணிநீக்கம் செய்ய டொனால்ட் டிரம்ப் முடிவெடுத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். எதிர்வரும் ஜனவரி 20ஆம் திகதியன்று ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார்.
இந்த நிலையில், வெள்ளை மாளிகை திரும்பியவுடன் ராணுவத்தில் பணியாற்றும் மூன்றாம் பாலினத்தவர்களை பணியிலிருந்து நீக்கும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட உள்ளதாகவும் இதனால் மூன்றாம் பாலினத்தவர்கள் ராணுவத்தில் சேர தடை விதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
தற்போது அமெரிக்க ராணுவத்தில் 15,000 க்கும் மேற்பட்ட மூன்றாம் பாலினத்தவர்கள் பணியாற்றுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள செய்தியில், மூன்றாம் பாலினத்தவர்கள் மருத்துவ ரீதியாக தகுதியற்றவர்கள் எனக்கூறி, அவர்கள் சேவை செய்ய தகுதியற்றவர்கள் என்று அறிவிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.