வட கொரியா மீது நடவடிக்கை எடுக்க நட்பு நாடுகளுக்கு ஜெலென்ஸ்கி கோரிக்கை
வேடிக்கை பார்ப்பதை நிறுத்திவிட்டு வடகொரியத் துருப்புகள் ரஷ்யாவில் தரையிறக்கப்பட்டது தொடர்பில் நடவடிக்கை எடுத்து உதவுமாறு தமது நட்பு நாடுகளுக்கு உக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார்.
தமது நாட்டின் மீது வடகொரியத் துருப்புகளும் போர் தொடுப்பதற்கு முன் செயலில் இறங்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
வடகொரியா அதன் ராணுவ ஆற்றல், ஏவுகணைப் பாய்ச்சல், ஆயுதத் தயாரிப்பு ஆகியவற்றில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக டெலிகிராம் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளியில் ஸெலன்ஸ்கி குறிப்பிட்டார்.
“இனி துரதிர்ஷ்டவசமாக நவீனப் போர்முறையையும் அவர்கள் கற்றுக்கொள்வார்கள்,” என்றார் அவர்.
“வடகொரியாவின் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் உக்ரேனிய எல்லை அருகே உள்ளனர். அவர்களுக்கு எதிராகத் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் கட்டாயத்திற்கு உக்ரேனியர்கள் தள்ளப்படுவார்கள். அதையும் உலகம் வேடிக்கை பார்க்கும்,” என்றார் ஸெலன்ஸ்கி.
ரஷ்யாவில் எந்தெந்தப் பகுதிகளில் வடகொரிய ராணுவ வீரர்கள் உள்ளனர் என்பதை உக்ரேன் கண்டறிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இருப்பினும், அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்குத் தேவையான தொலைதூர ஆயுதங்களை கியவ்வின் நட்பு நாடுகள் தரவில்லை என்றார் அவர்.
“அவசியமாகத் தேவைப்படுகின்ற தொலைதூர ஆற்றலுடைய ஆயுதங்களுக்குப் பதிலாக, அமெரிக்கா வேடிக்கை பார்க்கிறது, பிரிட்டன் வேடிக்கை பார்க்கிறது, ஜெர்மனி வேடிக்கை பார்க்கிறது” என்று காணொளியில் கூறினார் ஸெலன்ஸ்கி.