தொப்புள் கொடியை வெட்டிய இர்பான் ; மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டோம்
சர்ச்சைக்குரிய யூடியூப்பராக வலம் வருபவர் இர்பான். இவர் ஃபுட் விலாகராக இருந்து தனக்கென யூடியூப்பில் மில்லியன் கணக்கில் பாலோவர்களையும் வைத்திருக்கிறார்.
இவர் திருமணத்துக்கு பின்னர் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அந்த வகையில் சென்னை மறைமலை நகர் அருகே காரில் வேகமாக வந்தபோது அவர் வந்த கார் மூதாட்டி மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது மிகப்பெரிய சர்சையை ஏற்படுத்தியது.
பின்னர் நாளடைவில் அந்த விபத்து விவகாரம் காத்துவாக்குல கடந்து சென்றது. இதையடுத்து கர்ப்பமாக இருக்கும் தன் மனைவி உடன் இர்பான் துபாய்க்கு சென்று அங்கு தனக்கு பிறக்க போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை கண்டறிந்தது மட்டுமின்றி அதற்காக ஒரு பார்ட்டி வைத்து அதை வீடியோவாகவும் வெளியிட்டு காசுபார்த்தார்.
அப்போது இர்பானின் செயலுக்கு கண்டனம் குவிந்ததால் அந்த வீடியோவை அவர் யூடியூப்பில் இருந்து நீக்கினார்.
தற்போது ஒரு படி மேலே போய் தன்னுடைய மனைவி குழந்தை பெற்ற போது பிரசவ வார்டுக்குள் கேமரா உடன் சென்ற இர்ஃபான், அங்கு குழந்தை பிறந்ததும் அதன் தொப்புள் கொடியை தன் கையால் வெட்டி விட்டிருக்கிறார்.
அதுவும் வீடியோவில் பதிவாகி அந்த வீடியோவை யூடியூப்பில் பதிவேற்றி இருந்தார். அந்த வீடியோ வெளியானதும் இர்பான் மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து அமைச்சர் மா.சுப்ரமணியத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது.
ஒவ்வொரு முறையும் அரசின் பின்புலத்தால் இர்பான் தப்பித்து வருவதாகவும் இந்த முறை அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்கிற கேள்விக்கு பதிலளித்த அவர், இந்த முறை இர்பான் மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டார்கள், அவர்மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். அவரின் இந்த செயல் மன்னிக்க கூடியது அல்ல கண்டிக்க கூடியது என அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனால் இர்பான் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.