எலும்புகளை பாதிக்கும் மெக்னீசியம் குறைபாடுகளின் அறிகுறிகள்
மெக்னீசியம் நமது உடலுக்கு தேவையான ஒரு அத்தியாவசிய கனிமமாகும்.
நரம்பு மண்டலத்தின் செயல்பாடு முதல் இதய ஆரோக்கியம், தசைகள் ஆரோக்கியம் எலும்புகளை வலுப்படுத்துதல், ஆற்றல் உற்பத்தி வரை அனைத்தும் இதில் அடங்கும். மெக்னீசியம் நிறைந்த உணவை உட்கொள்வதால், உயர் இரத்த அழுத்தம் மற்றும் உயர் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் வைத்திருக்கும். எனவே, தினசரி உணவில் மெக்னீசியம் நிறைந்த உணவுகளை சேர்ப்பது மிக அவசியம்.
குமட்டல் மற்றும் வாந்தி, பசியின்மை, சோர்வு, தசைப்பிடிப்பு மற்றும் இழுப்பு, தூக்கமின்மை போன்ற அறிகுறிகள் உடலில் மெக்னீசியம் குறைபாட்டை எடுத்துரைக்கும் அறிகுறிகள். அவற்றை உடனடியாகக் கட்டுப்படுத்துவது அவசியம். இல்லையெனில் நாளடைவில் உயர் ரத்த அழுத்தம், டைப் 2 சர்க்கரை நோய், ஆஸ்டியோபோரோசிஸ், நாள்பட்ட ஒற்றைத் தலைவலி போன்ற நோய்கள் வரலாம். இந்நிலையில், மெக்னீசியம் குறைபாடு ஏற்படாமல் இருக்க எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகளை (Health Tips) அறிந்து கொள்ளலாம்.
பருப்பு வகைகள்
உங்கள் உணவில் அனைத்து பருப்பு வகைகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அதிலும் பீன்ஸ் பருப்பில் மெக்னீசியம் சத்து அதிகம் உள்ளது. குறிப்பாக உளுந்து மற்றும் கருப்பு பீன்ஸ் சாப்பிடுவதன் மூலம் மெக்னீசியம் குறைபாட்டை ஈடுசெய்ய முடியும். 1 கப் கருப்பு பீன்ஸில் 120 மி.கி மெக்னீசியம் உள்ளது.
நட்ஸ் என்னும் உலர் பழங்கள்
நட்ஸ் என்னும் உலர் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மெக்னீசியம் குறைபாட்டை ஈடு செய்யலாம். பாதாம், முந்திரி, வேர்க்கடலை போன்றவற்றை அவசியம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு அவுன்ஸ் பாதாம் பருப்பில் 80 மில்லிகிராம் மெக்னீசியம் உள்ளது. அதே சமயம் முந்திரியில் 74 மில்லிகிராம் மெக்னீசியம் உள்ளது. 2 டேபிள் ஸ்பூன் வேர்க்கடலை வெண்ணெயில் 49 மில்லிகிராம் உள்ளது. பூசணி விதைகளிலும் மெக்னீசியம் நிறைந்துள்ளது.
பச்சை இலை காய்கறிகள்
கீரை வகைகள் உள்ளிட்ட பச்சை இலை காய்கறிகள் மெக்னீசியத்தின் சிறந்த ஆதாரங்கள். அவற்றில் அதிக அளவு நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன.
தயிர்
தயிர் கால்சியம் சத்து மட்டுமல்ல. அதில் மெக்னீசியமும் உள்ளது. காலை உணவிலும், மதிய உணவிலும் தவறாமல் சேர்த்துக் கொள்ளவும். தயிரில் புரதங்கள் மற்றும் புரோபயாடிக்குகள் உள்ளன. அவை செரிமானத்திற்கு நன்மை பயக்கும்.
சோளம்
உணவில் சோளத்தை சேர்ப்பதன் மூலம் உடலில் மெக்னீசியம் குறைபாட்டை ஈடுசெய்யலாம். பசையம் இல்லாத சோளம் மெக்னீசியம் நிறைந்தது. மேலும் இதில் நல்ல அளவு நார்ச்சத்தும் உள்ளது.
குயினோவா
குயினோவா மெக்னீசியம் நிறைந்த சிறந்த உணவு. சுமார் 1 கப் சமைத்த குயினோவாவில் 118 மில்லிகிராம் மெக்னீசியம் உள்ளது. மேலும், இதில், அதிக புரதம் மற்றும் தாதுக்கள் உள்ளன. இது தவிர, அனைத்து முழு தானியங்களும் மெக்னீசியத்தின் நல்ல மூலமாகும்.
வெண்ணெய் பழம்
அவகேடோ மெக்னீசியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளின் நல்ல மூலமாகும். இதை சாலட் அல்லது சாண்ட்விச்சில் சேர்ப்பதன் மூலம் பலன் அடையலாம்.