சிங்கப்பூரின் முன்னாள் அமைச்சர் ஈஸ்வரனுக்கு 12 மாதச் சிறைத்தண்டனை – நீதிபதி வெளியிட்ட தகவல்
சிங்கப்பூரின் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரனுக்கு 12 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
62 வயதான ஈஸ்வரன் மொத்தம் 35 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கிய நிலையில் இன்றைய நிதி அவருக்கு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
7 ஆண்டில் நண்பர்கள் எனப்படும் 2 தொழிலதிபர்களிடமிருந்து ஈஸ்வரன் பரிசுகளைப் பெற்றார். அவற்றில் அவர் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை 5 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். அதற்கான தண்டனையை நீதிபதி இன்று அறிவித்தார்.
எதிர்த்தரப்பு வழக்கறிஞர்களும் அரசாங்க வழக்கறிஞர்களும் முன்வைத்த வாதங்களைக் கருத்தில்கொண்டாலும் அவற்றை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என Vincent Hoong கூறினார்.
இதேவேளை, தண்டனையை இம்மாதம் 7ஆம் திகதி மாலை 4 மணி வரை ஒத்திவைக்கும்படி ஈஸ்வரன் நீதிபதியிடம் கேட்டுக்கொண்டார். அதற்கு நீதிபதி ஒப்புதல் வழங்கினார்.
இந்த நிலையில், அரசாங்கத்தில் பதவிநிலை உயர உயரத் தண்டனைக்குரிய நிலையும் அதிகரிக்கும் என்று சிங்கப்பூரின் முன்னாள் அமைச்சர் ஈஸ்வரனின் வழக்கில் நீதிபதி Vincent Hoong தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஈஸ்வரனின் வழக்கில் தீர்ப்பு வழங்குவதற்கு முன் நீதிபதி அவருடைய கருத்துகளை முன்வைத்தார்.
அதற்கமைய, உயர் பதவிகளை வகிப்போர் அரசாங்க ஊழியர்களுக்கு முன்மாதிரியாக நேர்மையோடு இருக்க வேண்டும் என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
பணம் சம்பந்தமான பலன்களுக்கு அவர்கள் அடிபணியமாட்டார்கள் என்ற நம்பிக்கையை அவர்கள் கொடுக்கவேண்டும் என்று நீதிபதி குறிப்பிட்டார்.
தண்டனையை முடிவு செய்வதற்கு முன்னர் 2 முக்கிய அம்சங்களைக் கருத்தில்கொள்ள வேண்டுமென நீதிபதி ஹூங் குறிப்பிட்டார்.
அரசாங்க ஊழியராக விலைமதிப்புள்ள பொருள்களைப் பெறும் குற்றத்திற்குச் சரியான தண்டனையை விதிக்கும் அணுகுமுறையைப் பின்பற்றுவது முதலாவது அம்சம் என அவர் கூறியுள்ளார்.
வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் குற்றத்தை ஒப்புக்கொள்கிறாரா என்பதைப் பொறுத்துத் தண்டனையைக் குறைப்பது இரண்டாவது அம்சம் என நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
“பொதுக்கழகங்கள் மீதுள்ள நம்பிக்கைதான் திறமையான ஆட்சிமுறைக்கு முக்கிய அடித்தளம் என்பதை நான் வலியுறுத்துகிறேன்” என அவர் கூறினார்.