ஆரம்பிக்க முன்னாடியே ஏழரையை கூட்டியாச்சி… 20 அடி உயரத்திலிருந்து விழுந்த நபர்
																																		பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி துவங்க உள்ள நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி காண போட்டியாளர் தேர்வு முதல் செட் அமைக்கும் பணிகள் வரை அனைத்தையும் விஜய் டிவி தரப்பு துரிதமாக செய்து வருகிறது.
கடந்த 7 பிக்பாஸ் சீசன்கள் எப்படி ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றதோ அதே அளவிலான எதிர்பார்ப்பு பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சிக்கும் உள்ளது.
குறிப்பாக கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை கொண்டு சென்றது போல், நேர்த்தியாக விஜய் சேதுபதி கொண்டு செல்வாரா? என ரசிகர்கள் மனதில் ஒரு கேள்வி இருக்கும் நிலையில், அதனை எப்படி விஜய் சேதுபதி நிரப்ப போகிறார் என்பதை பலர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சிக்கான பிரமாண்ட செட் அமைக்கும் பணி, செம்பரம்பாக்கத்தை அடுத்துள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடந்து வந்தது. EVP ஃபிலிம் சிட்டியில் பிக்பாஸ் நிகழ்ச்சி மட்டுமின்றி, ஏராளமான சீரியல் படப்பிடிப்பு, திரைப்படங்களின் படப்பிடிப்பு, ரியாலிட்டி ஷோக்கள் போன்றவை பிரத்தேயேக செட் அமைத்து படமாக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான, பிக்பாஸ் செட் அமைக்கும் பணியில் ஏராளமான ஊழியர்கள் ஈடுபட்டிருந்த நிலையில், வடமாநில ஊழியர் ஒருவர் 20 அடி உயரத்தில் இருந்து, கீழே விழுந்ததில் அவருக்கு கை மற்றும் இடுப்பு எலும்பு உடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
உடனடியாக அவர் அருகே இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவருக்கு மருத்துவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மேலும் நசரத்பேட்டை போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கீழே விழுந்த, வடமாநில நபர் உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த 46 வயதாகும் முகமது ஷாஹில் கான் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தற்போது பிக்பாஸ் தரப்பினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

        



                        
                            
