இஸ்ரேல் ஹிஸ்புல்லா இடையே மோதல் – நேரடியாக தலையிடும் அமெரிக்கா
இஸ்ரேல் ஹமாஸ் இடையே ஒரு பக்கம் மோதல் முடியாமல் தொடரும் நிலையில், இப்போது இஸ்ரேல் ஹிஸ்புல்லா இடையேயும் மோதல் வெடித்துள்ளது. உலக நாடுகளின் கோரிக்கையைப் புறந்தள்ளி இரு தரப்பும் தாக்குதலைத் தீவிரப்படுத்தப் போவதாக அறிவித்துள்ள நிலையில், இது சர்வதேச அளவில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
மத்திய கிழக்குப் பகுதியில் கடந்த சில காலமாகவே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஒரு பக்கம் இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் தொடர்ந்து வருகிறது. காசா பகுதியில் இருக்கும் ஹமாஸை முழுமையாக அழிக்கும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் அறிவித்துவிட்டது. காசா மீதான தாக்குதலைக் கண்டித்து மறுபுறம் லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. முதலில் சிறு துப்பாக்கிச் சூடு, சிறிய ஏவுகணை தாக்குதல் எனத் தொடங்கிய இது இப்போது தீவிரமடைந்துள்ளது. இதற்கிடையே இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் தங்கள் எல்லை தாண்டிய தாக்குதல்களைத் தீவிரப்படுத்துவதாக அச்சுறுத்தியுள்ளனர்.
ஏற்கனவே இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் தொடரும் நிலையில், இதுவும் ஒரு போராக மாறினால் அது பிராந்திய மோதலாக வெடிக்கும் என்று சர்வதேச நாடுகள் எச்சரிக்கின்றன. இருப்பினும், இரு தரப்புமே அதைக் கேட்பதாகத் தெரியவில்லை.
ஹிஸ்புல்லா மீது பேஜர் மற்றும் வாக்கி டாக்கி தாக்குதல்கள் நடந்தன. இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை என்ற போதிலும் இஸ்ரேல் தான் காரணம் என ஹிஸ்புல்லா கருதுகிறது. அதைத் தொடர்ந்து வடக்கு லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பின் கோட்டைகளைக் குறிவைத்தது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதனால் பலர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனால் கடும் கோபத்தில் இருக்கும் ஹிஸ்புல்லா பழிவாங்கத் தயாராக இருக்கிறது. இஸ்ரேல் உடனான மோதல் இப்போது ஒரு புதிய கட்டத்தை எட்டியுள்ளதாக ஹிஸ்புல்லா துணைத் தலைவர் நைம் காசிம் அறிவித்துள்ளது பதற்றத்தை அதிகப்படுத்தியுள்ளது. மறுபுறம் இஸ்ரேலும் தாக்குதலை நிறுத்த போவதில்லை என்பது போலவே கருத்து கூறி வருகிறது.
இஸ்ரேல் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தங்கள் அரசு உறுதியாக உள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோசவ் கல்லன்ட் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், “இஸ்ரேலின் வடக்கு பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளுக்குப் பாதுகாப்பாகத் திரும்புவதை உறுதி செய்வோம். அந்த நிலையை அடையும் வரை ராணுவ நடவடிக்கைகள் தொடரும்” என்று கூறினார்.
இப்படி இரு நாடும் தாக்குதலுக்குத் தயாராக இருப்பது சர்வதேச பதற்றத்தை அதிகரித்துள்ளது. இஸ்ரேலின் நட்பு நாடான அமெரிக்கா, தாக்குதலைத் தவிர்த்து நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. ராணுவ நடவடிக்கை என்பது சிறந்த தீர்வை தராது என்றும் அது மோதலை அதிகரிக்கவே செய்யும் என்று அமெரிக்க அதிபர் பைடன் கூறியுள்ளார். பிராந்திய போர் வெடிக்காமல் இருக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்றும் அவர் கூறியுள்ளார். இரு தரப்பிற்கும் இடைய சமாதானம் செய்து வைக்க கத்தார், எகிப்து மற்றும் அமெரிக்கா நாடுகள் தீவிரமாக முயன்று வருகின்றன. இருப்பினும், மோதல்கள் குறைவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. இஸ்ரேல் ஹிஸ்புல்லா இடையே வெடித்துள்ள இந்த மோதல் காசாவில் அமைதியைக் கொண்டு வருவதையும் பாதிப்பதாக எகிப்து தெரிவித்துள்ளது. இந்த மோதல் குறித்து கவலை தெரிவித்துள்ள ஐநா, பேரழிவு தொடங்கும் நேரத்தின் விளிம்பில் நாம் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.