வசூலில் சாதனைக்கு மேல் சாதனை படைக்கும் கோட்…
நடிகர் விஜய் நடிப்பில் செப்டம்பர் 5-ந் தேதி திரைக்கு வந்த திரைப்படம் கோட். வெங்கட் பிரபு இயக்கிய இப்படத்தில் நடிகர் விஜய் தந்தை, மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.
இப்படம் முதல் நாளிலேயே உலகளவில் ரூ.126 கோடி வசூலித்திருந்த நிலையில், இரண்டாம் நாளில் அதன் வசூல் அப்படியே பாதியாக குறைந்தது. பின்னர் மூன்றாம் நாளான நேற்று விநாயகர் சதுர்த்தி விடுமுறை என்பதால் மீண்டும் பிக் அப் ஆகி உள்ளது.
அதன்படி கோட் திரைப்படம் மூன்று நாட்கள் முடிவில் ரூ.225 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளதாக கூறப்படுகிறது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் 80 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாகவும் இன்றைய நாள் முடிவில் அது 100 கோடி வசூலை எட்டவும் வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெளிநாட்டிலும் சக்கைப்போடு போட்டு வரும் கோட் திரைப்படம் வெளிநாடுகளில் மட்டும் 100 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. அதிலும் சிங்கப்பூரில் மூன்று நாள் முடிவில் இப்படம் 7.75 கோடி வசூலித்துள்ளதாம். அதேபோல் மலேசியா மற்றும் இலங்கையிலும் கோட் படம் வசூல் வேட்டை நடத்தி வருகிறதாம்.
கேரளாவை காட்டிலும் கர்நாடகாவில் கோட் படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அங்கு முதல் நாளில் 8.33 கோடியும், இரண்டாவது நாளில் 2.62 கோடியும் வசூலித்திருந்த கோட் திரைப்படம் மூன்றாவது நாளில் 4.13 கோடி வசூலித்து மொத்தமாக இதுவரை 15.08 கோடி வசூலித்து உள்ளது.
நடிகர் விஜய்யின் கோட் படம் மூன்று நாட்களில் 200 கோடி வசூலை தாண்டியதோடு மட்டுமின்றி ஒரு மாஸ் சாதனையையும் படைத்துள்ளது. அதன்படி அதிக 200 கோடிக்கு மேல் வசூல் அள்ளிய தமிழ் நடிகர்களின் பட்டியலில் நடிகர் விஜய் 8 படங்களுடன் முதல் இடத்தில் உள்ளார். இதற்கு அடுத்தபடியாக ரஜினி 6 படங்களுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். அஜித், கமல்ஹாசன் ஆகியோருக்கு இதுவரை ஒரே ஒரு 200 கோடி வசூல் படம் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.