38 நாடுகளுக்கு விசா இல்லாத அணுகலை அறிவித்துள்ள இலங்கை! வெளியான புதிய அறிவிப்பு
38 நாடுகளுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் விசா இல்லாத அணுகலை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று அறிவித்துள்ளார்.
சிங்கப்பூரின் நெறிப்படுத்தப்பட்ட ‘one-chop’ அணுகுமுறையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது, அங்கு விசா அல்லது விசா நீட்டிப்பு விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட்டில் ஒரே ஒரு அதிகாரப்பூர்வ முத்திரை அல்லது முத்திரையுடன் (‘சாப்’) வழங்கப்படுகிறது என அமைச்சர் சப்ரி, தெரிவித்துள்ளார்.
இந்த முடிவு விசா கவுண்டர்களில் நெரிசலைக் குறைக்க உதவும் என்று வெளியுறவு அமைச்சர் மேலும் கூறினார்.
இதேவேளை, முன்னாள் சுற்றுலா அமைச்சரும், ஜனாதிபதியின் சுற்றுலா விவகாரங்களுக்கான ஆலோசகருமான ஹரின் பெர்னாண்டோவும், ‘ஒன்-சாப்’ வீசா இல்லாத முறை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அறிமுகப்படுத்தப்படும் என உறுதிப்படுத்தினார்.
மேலும் இந்த நடவடிக்கையை நிறைவேற்றுவதற்கு அமைச்சரவை ஜனாதிபதிக்கு முழு அதிகாரம் வழங்கியுள்ளதாக முன்னாள் அமைச்சர் கூறினார்.
இலங்கையில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள விசா வழங்கும் முறைமையில் ஏற்பட்ட பிரச்சினையை அடுத்து, கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுற்றுலாப் பயணிகள் தாமதத்தை எதிர்கொண்டுள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது