பாலியல் வன்கொடுமை – இலங்கையை விட்டு வெளியேற பிரபல கோடீஸ்வரருக்கு தடை
பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், கோடீஸ்வர வர்த்தகரான ரிச்சர்ட் பீரிஸ் குழுமத்தின் தலைவர் சேனா யத்தேஹகே நாட்டை விட்டு வெளியேறுவதற்கு கோட்டை நீதவான் கோசல பயணத் தடை விதித்தார்.
கொள்ளுப்பிட்டியில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் வியாபார விவகாரங்களை ஆராய சென்ற போது குறித்த கோடீஸ்வர வர்த்தகர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகக் கூறி, கொள்ளுப்பிட்டி பொலிஸார் விடுத்த கோரிக்கையை ஏற்று வெளிநாட்டு பயணத்தடையை பிறப்பித்தனர்.
இளம் வணிகப் பகுப்பாய்வாளர் செய்த முறைப்பாடு தொடர்பான விசாரணையின் முன்னேற்றத்தை நீதிமன்றத்திற்கு தெரிவித்த கொள்ளுப்பிட்டி பொலிஸார், சுமார் ஒரு மாத காலமாக வெளிநாட்டில் இருந்த சேன யத்தேஹிகே இலங்கை திரும்பியதும் முறைப்பாட்டாளர் அழைக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
ரிச்சர்ட் பீரிஸ் குழுமத்தின் வர்த்தக விவகாரங்களை ஆய்வு செய்வதற்காக கொள்ளுப்பிட்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் வர்த்தகர் தங்கியுள்ளார்.
அவரது அழைப்பின்படி, கடந்த மே மாதம் 7ஆம் திகதி கொள்ளுப்பிட்டி பகுதியிலுள்ள நட்சத்திர ஹோட்டலுக்குச் சென்ற முறைப்பாட்டாளர், வியாபார விவகாரங்களை ஆராயத் தயாரான போது, சந்தேகநபர் தம்மை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், சந்தேகநபர் வெளிநாடு செல்வதை தடை செய்து உத்தரவு பிறப்பிக்குமாறு கொள்ளுப்பிட்டி பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த நீதவான், சந்தேக நபருக்கு பயணத்தடை விதித்ததுடன், சந்தேக நபர் நாட்டை விட்டு வெளியேறினால் அவரை கைது செய்யுமாறு குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.