உக்ரைனுடனான மோதலில் ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய மேலும் இரு இந்தியர்கள் பலி!
ரஷ்யா – உக்ரைன் போரில் ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட மேலும் இரண்டு இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தப் பேரில் இதுவரை உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
ரஷ்யா – உக்ரைன் இடையே கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் போர் நிகழ்ந்து வருகிறது. இதில், ரஷ்ய ராணுவத்துக்கு பல்வேறு நாடுகளிலிருந்தும் ஆள் சேர்ப்பு செய்யப்பட்டு, அவர்களும் போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அந்த வகையில் இந்தியாவிலிருந்து ரஷ்யாவில் வேலை என தவறான விளம்பரங்கள் வெளியிடப்பட்டு, அதற்காக நாடுபவர்களை ரஷ்யாவுக்கு அழைத்துச் சென்று, அங்கு சென்றதும் உக்ரைனுடான போரில் ஈடுபட ரஷ்ய ராணுவத்தில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்ட ஓர் அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்நிலையில், ரஷ்ய ராணுவத்தில் பாதுகாப்பு உதவியாளர்களாக சுமார் 200 இந்தியர்கள் பணியமர்த்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய அரசின் நடவடிக்கையின்பேரில் இவர்களில் 10 இந்தியர்கள் மீட்கப்பட்டு இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சூழலில் ரஷ்ய ராணுவத்தில் பணியமர்த்தப்பட்ட இந்தியர்களில் மேலும் இருவர் பலியாகியு்ள்ளனர்.
இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், “இந்த விடயத்தை இந்தியா தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. ரஷ்ய ராணுவத்தில் புதிதாக இந்தியர்களை சேர்ப்பதை நிறுத்தவும், ராணுவத்தில் சேர்க்கப்பட்ட அனைத்து இந்திய பிரஜைகளையும் விரைவில் திருப்பி அனுப்ப வேண்டும் எனவும் அந்நாட்டிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.