#All Eyes on Rafah.. இஸ்ரேலுக்கு எதிராக கிளம்பியுள்ள சர்வதேச பிரபலங்கள்
பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதல் தீவிரமடைந்து தற்போது, ராஃபா எல்லையில் இஸ்ரேல் கொடூர தாக்குதலை தொடுத்து வருகிறது. இந்நிலையில், ‘All Eyes on Rafah’ எனும் வார்த்தை டிரெண்டாக தொடங்கியுள்ளது.
காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் சமீபத்தில் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் ஐநா பணியாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில் 7 பேர் கொல்லப்பட்டனர். எனவே உடனடியாக போர் நிறுத்தத்தை கொண்டு வரவேண்டும் என்று உலக நாடுகள் தீவிரமாக வலியுறுத்த தொடங்கின. இதுநாள் வரை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற அமெரிக்கா கூட, உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.
போர் காரணமாக காசாவுக்குள் நிவாரண பொருட்கள் எதுவும் வரவில்லை. இதனால் உணவுக்கும், குடிநீருக்கும் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. நோயாளிகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் உணவு கிடைக்காமல் அடுத்தடுத்து உயிரிழந்தனர். தொற்று நோய் பாதிப்புகளும் தீவிரமடைந்துள்ளன.
உணவு, குடிநீர் தேடி எகிப்து எல்லையான ராஃபாவில் பாலஸ்தீன மக்கள் குவிந்துள்ளனர். ராஃபா எல்லையை கடந்துவிட்டால் எகிப்துக்கு சென்றுவிடலாம். ஆனால், எகிப்து பாலஸ்தீன மக்களை அனுமதிக்கவில்லை. இருப்பினும், அம்மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை தேவைகளையும் எகிப்து செய்து வருகிறது. உலக நாடுகள் அனுப்பும் மருந்துகளும், உணவும் எகிப்து வழியாக ராஃபா எல்லைக்கு அருகில் குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த உதவிகள் பாலஸ்தீன மக்களுக்கு சென்று சேர்வதை இஸ்ரேல் தொடர்ந்து தடுத்து வருகிறது. இந்திலையில் நேற்று முன்தினம் இஸ்ரேலின் டெல் அவிவ் மீது ஹமாஸ் அமைப்பு ராக்கெட்களை வீசி தாக்குதலை நடத்தியிருக்கிறது. இதில் உயிரிழப்புகளோ, பொருள் சேதமோ ஏதும் ஏற்படவில்லை. இருப்பினும் இதற்கு இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் பாதுகாப்புப்படை, ராஃபா எல்லையில் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், 35 பேர் பலியாகியுள்ளனர். இதில் குழந்தைகள்தான் அதிகம்.
இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு எதிராக உலகம் முழுவழுதும் பிரபலங்கள் கொதித்தெழுந்து வருகிறார்கள். இந்த பிரபலங்கள் ‘All Eyes on Rafah’ எனும் ஹாஷ்டேகை டிரெண்ட் செய்து வருகிறார்கள். ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளின் உலக சுகாதார அமைப்பு அலுவலகத்தின் இயக்குநர் ரிக் பீபர்கார்ன்தான் முதன் முதலில் இந்த வாக்கியத்தை பயன்படுத்தினார். அதனை தொடர்ந்து இந்தியாவின் பிரபல சினிமா நட்சத்திரங்கள், இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் தொடங்கி சர்வதேச பிரபலங்கள் வரை இந்த வார்த்தையை பயன்படுத்த தொங்கியுள்ளனர். டிக்டாக்கில் 1.95 லட்சம் போஸ்ட்கள் இந்த வார்த்தையை ஹாஷ்டேகாக பயன்படுத்தியுள்ளன. அதேபோல, இன்ஸ்டாகிராமில் 1 லட்சம் போஸ்ட்கள் பதிவிடப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.