விசா கட்டணத்தை உயர்த்திய அவுஸ்ரேலியா : இன்று முதல் அமுலுக்கு வரும் புதிய நடைமுறை!
சர்வதேச மாணவர்களுக்கான விசா தேவையை உயர்த்த ஆஸ்திரேலியா நடவடிக்கை எடுத்துள்ளது.
ஏழு மாதங்களில் இரண்டாவது முறையாக நிதித் திறன் தேவை அதிகரிக்கப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதற்கமைய அறிமுகப்படுத்தபட்டுள்ள புதிய விதி இன்று (10.05) முதல் நடைமுறைக்கு வருகிறது.
புதிய விதியின்படி சர்வதேச மாணவர்கள் குறைந்தபட்சம் $29,710 அவுஸ்ரேலிய டொலருக்கான சேமிப்புக்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும்.
அக்டோபர் 2023 இல் இந்த தொகை 21,041 அவுஸ்ரேலிய டொலராக இருந்த நிலையில், சமீபத்தில் 24,505 அவுஸ்ரேலிய டொலராக பதிவாகியது. தற்போது இந்த தொகை ஏறக்குறைய 30,000 அவுஸ்ரேலிய டொலராக காணப்படுகின்றது.
நிதித்தேவையை பூர்த்தி செய்ய ஏறக்குறைய 75 வீதமான ஊதியத்தை பெற வேண்டும் என்று அவுஸ்ரேலியாவின் உள்துறை அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஆஸ்திரேலியாவில் படிக்கும் போது குறைந்தபட்ச வாழ்க்கைத் தரத்தை வழங்குவதற்கு நியாயமானதாகக் கருதப்படுகின்றது.
இதேவேளை கடந்த மார்ச் மாதம் மாணவர் அனுபவத்தை மேம்படுத்தவும், பணியிடச் சுரண்டலைக் குறைக்கவும், மாணவர் விசாக்களுக்கான ஆங்கில மொழித் தேவைகள் IELTS 5.5 இலிருந்து 6.0 ஆகவும், பட்டதாரி விசாக்கள் IELTS 6.0 இலிருந்து 6.5 ஆகவும் அதிகரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.