ஆஸ்திரேலியா – வாடகை தொடர்பில் பிரச்சனை… இந்திய மாணவர் ஒருவர் குத்தி கொலை!
ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்களுக்கு இடையே நடந்த சண்டையின் போது 22 வயதான எம்டெக் மாணவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதாக பாதிக்கப்பட்ட மாணவரின் உறவினர் இன்று தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை இரவு 9 மணியளவில் இந்திய மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இந்தியாவின் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். மற்றொரு மாணவர் காயமடைந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்த நவ்ஜீத் சாந்து என்ற மாணவரின் மாமாவும், முன்னாள் ராணுவ வீரருமான யஷ்வீர் கூறும் போது, “மெல்போர்னில் இந்திய மாணவர்கள் சிலரிடையே வாடகை தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது. அப்போது இந்த விவகாரத்தில் தலையிட முயன்ற நவ்ஜீத் சாந்து மற்றொரு மாணவரால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் மேலும் ஒரு மாணவர் காயமடைந்தார். நவ்ஜீத் சாந்துவைப் போலவே தகராறில் தொடர்புடைய மாணவர்களும் ஹரியாணாவின் கர்னல் நகரைச் சேர்ந்தவர்கள்.
நவ்ஜீத் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக இந்தியாவில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை தகவல் கிடைத்தது. இதனை அறிந்த நவ்ஜீத் சாந்து குடும்பத்தினர் அதிர்ச்சியில் உள்ளனர். நவ்ஜீத் ஒரு சிறந்த மாணவர். வரும் ஜூலை மாதம் விடுமுறையில் ஊருக்கு வர இருந்தார்.
நவ்ஜீத் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு படிப்பு விசாவில் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றார். விவசாயியான அவரது தந்தை, நவ்ஜீத்தின் கல்விக்காக ஒன்றரை ஏக்கர் நிலத்தை விற்று படிக்க அனுப்பி வைத்தார்.