சர்ச்சையில் சிக்கிய கர்நாடக எம்பி: மோடி இந்திய பெண்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்- ராகுல் காந்தி வலியுறுத்தல்
ஹசன் ஜேடிஎஸ் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா 400 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து அவர்களின் வீடியோக்களை வெளியிட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் அவருக்கு வாக்கு கேட்டதற்காக பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். .
தேர்தல் பேரணி ஒன்றில் உரையாற்றிய ராகுல் காந்தி, மோடியை குறிவைத்து, “கொடுமையான பலாத்காரத்திற்கு” வாக்கு கேட்டதற்காக இந்திய பெண்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
கர்நாடக எம்பி பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அவர் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து இன்று இடைநீக்கம் செய்யப்பட்டார்.
கர்நாடகாவின் ஹாசன் தொகுதியின் தற்போதைய எம்.பி.யான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கும் இது தொடர்பாக கட்சியில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
பிரஜ்வல் ரேவண்ணா சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ கிளிப்புகள், அவரது தொகுதிக்கு வாக்குப்பதிவு நடந்த ஒரு நாள் கழித்து சமூக ஊடகங்களில் வெளிவந்தன.
ஜேடிஎஸ் தலைவரும் முன்னாள் பிரதமருமான எச்டி தேவகவுடாவின் பேரன் ரேவண்ணாவால் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் நூற்றுக்கணக்கான ஆபாசமான வீடியோக்கள் ஹாசன் தொகுதியில் பரவலாகப் பரப்பப்பட்டன
மேலும் இது தொடர்பில் “இந்தியாவின் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளிடமும் பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும். பிரஜ்வல் ரேவண்ணா 400 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுக்கிறார். இது பாலியல் ஊழல் அல்ல, வெகுஜன பலாத்காரம்” என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் குற்றம் சாட்டினார்.