உமா ஓயா திட்டத்திற்கு அருகில் ஏற்பட்ட மண்சரிவு குறித்து நாளை ஆய்வு
உமா ஓயா திட்டத்தில் இருந்து இரண்டரை கிலோமீற்றர் தொலைவில் உள்ள கரந்தகொல்ல பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் தொடர்பில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர்கள் குழுவொன்று நாளை விசேட அவதானத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளது.
மண்சரிவு அபாயத்தைக் குறைக்கும் வகையில், மலையகத்தில் அதிகளவு தேங்கும் நீரை குறுகிய கால முறைகள் மூலம் கீழே இறக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக பதுளை மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.
தற்போது, எல்ல – கரந்தகொல்ல பிரதேசத்தில் சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில் மலித்தகொல்ல என்ற சாய்வான பகுதியில் சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட மண்சரிவு அபாயத்தை அதிகாரிகள் உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர்.
உமா ஓயா திட்டத்தின் சுரங்கப்பாதையில் நீர் நிரப்பப்படுவதனால் நீர் பாய்ந்து செல்லும் நிலையும் மண்சரிவுக்கான அறிகுறிகளுடன் வண்டல் மண் படிந்துள்ளமை குறித்து பிரதேச மக்கள் சந்தேகிக்கின்றனர்.
எவ்வாறாயினும், நீரியல் அல்லது புவியியல் ஆய்வுகளால் இது உறுதிப்படுத்தப்படவில்லை என பதுளை மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவர்தன நேற்று தெரிவித்தார்.
இதேவேளை, பதுளை மாவட்ட செயலாளர் உள்ளிட்ட குழுவினரும் இன்று அப்பிரதேசத்தில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.